குற்றவாளி ஞானசேகரனுக்கு தரப்படும் கடுமையான தண்டனையின் மூலம்... செல்வப்பெருந்தகை சொன்ன செய்தி!
AU Case Judgement Congress Selvaperunthagai
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விடுத்துள்ள அறிக்கையில், "அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் வழக்கின் தண்டனை விவரத்தை ஜூன் 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட புகாரில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சைதாப்பேட்டை 9-வது நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, மகளிர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.
29 சாட்சிகள், 75 சான்றுகள் மூலம் விசாரிக்கப்பட்டு இறுதியாக ஞானசேகரன் மீது 11 குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தரும் வகையிலும், பொதுமக்களுக்கு நம்பிக்கை தரும் வகையிலும் இந்த வழக்கு 5 மாதத்திற்குள் முடித்து வைக்கப்பட்டு நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வரவேற்கிறேன். துரிதமாக நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், காவல்துறையினருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வழக்கில் குற்றவாளி எந்த வகையிலும் தப்பிக்க வழியில்லாமல் வழக்கு விசாரணை நடைபெற்றது பாராட்டத்தக்கதாகும். இதன்மூலம் பெண்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்யப்படாது என்பது உறுதியாகியிருக்கிறது.
இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடித்து நீதி வழங்கியிருப்பதால் இதுபோன்ற பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறையும் என்றும், பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் தெளிவாகிறது.
குற்றவாளி ஞானசேகரனுக்கு தரப்படும் கடுமையான தண்டனையின் மூலம் பெண்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வையும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் தடுக்கமுடியும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
AU Case Judgement Congress Selvaperunthagai