தமிழக சட்டசபை நாளை கூடுகிறது: சபாநாயகர் தலைமையில் இன்று ஆலோசனை..! 
                                    
                                    
                                   As the Tamil Nadu Assembly meets tomorrow a meeting will be held today under the chairmanship of the Speaker
 
                                 
                               
                                
                                      
                                            கடந்த ஜனவரி மாதம் 06-ஆம் தேதி இந்த ஆண்டுக்கான தமிழக சட்டசபையின்  முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. 04 நாட்கள் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து, மார்ச் 14-ஆம் தேதி சட்டசபையில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 
அதனையடுத்து, மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, மார்ச் 17-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை 02 பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் நடைபெற்றது. மார்ச் 24-ஆம் தேதி முதல் ஏப்ரல் 29-ஆம் தேதிவரை துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடந்தன. பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் 06 மாத கால இடைவெளிக்கு பிறகு சட்டசபை மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்ற அவை விதியின் அடிப்படையில், தமிழக சட்டசபை பரபரப்பான அரசியல் சூழலில் நாளை மீண்டும் கூடுகிறது. இந்த சட்டசபை கூடியதும், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கற்குறிப்பு வாசிக்கப்படுவதோடு, கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்படவுள்ளது.
அத்துடன், இந்த சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யவுள்ளது. இதற்கான கூட்டம், சபாநாயகர் அறையில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் சட்டசபை கட்சிகளின் தலைவர்கள், கொறடாக்கள் பங்கேற்கிறார்கள். வரும் 15, 16 மற்றும் 17 ஆகிய 03 நாட்கள் அவை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த சட்டசபை கூட்டத்தொடரில் காசா போர் நிறுத்தம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. அத்துடன், தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதால் இந்த கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெறவுள்ளது.
                                     
                                 
                   
                       English Summary
                       As the Tamil Nadu Assembly meets tomorrow a meeting will be held today under the chairmanship of the Speaker