மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டவர்களுக்கே வாய்ப்பா? அல்லது புதிய வேட்பாளர்களா.? சூடுபிடித்துள்ள இடைத்தேர்தல் களம்..!
Are there opportunities for those who contested again in Madhurantakam and Dharapuram constituencies or are there new candidates
தமிழ்நாட்டில் மொத்தம் 07 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் வரும் அக்டோபர் 06-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டில் வெற்றி பெற்றிருந்த நிலையில், பெரம்பூர் தொகுதியை தக்கவைத்துக் கொண்டு, திருச்சி கிழக்கை ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து, அதிமுகவில் இருந்து மதுராந்தகம் (தனி) எம்.எல்.ஏ. மரகதம் குமாரவேல், தாராபுரம் (தனி) எம்.எல்.ஏ. சத்யபாமா, பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா, விராலிமலை எம்.எல்.ஏ. விஜயபாஸ்கர் மற்றும் கரூர் எம்.எல்.ஏ. எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் வெவ்வேறு காலகட்டங்களில் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர்.

இதனைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய ஏழு தொகுதிகளும் காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த ஏழு தொகுதிகளுக்கும் எப்போது இடைத் தேர்தல் நடத்தப்படும் எனும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், தற்போது தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இந்தியத் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தல் நடத்த அறிவித்துள்ளது.
அதன்படி இந்த இரண்டு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 09-ஆம் தேதி தொடங்கி 16-ஆம் தேதி நிறைவடையும் எனவும், வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் செப்டம்பர் 16-ஆம் தேதியும் எனவும், வாக்குப் பதிவு அக்டோபர் 06-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 09-ஆம் தேதி நடைபெறும் எனவும் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தாராபுரம் தொகுதியில் கடந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சத்யபாமா தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் இந்திராணியைவிட 16,727 வாக்குகளை கூடுதலாக பெற்று, மொத்தம் 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். இந்தத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட கௌரி சித்ரா மொத்தம் 46,438 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார்.
அதேபோன்று, மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமாரவேல் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் எழில் கேத்தரின் எழில்மலையைவிட 7,194 வாக்குகளை கூடுதலாக பெற்று, மொத்தம் 69,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். இந்தத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அமலு பொன்மலர் மொத்தம் 59,838 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார்.
இந்நிலையில் இரண்டு தொகுதிகளுக்கும் தற்போது இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தத் தொகுதிகளில் தவெக, அதிமுக, திமுக மற்றும் நாதக கட்சிகளின் சார்பில் யார் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள் எனும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
காலியாகவுள்ள ஏழு தொகுதிகளில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளைத் தவிர்த்து மற்ற ஐந்து தொகுதிகள் இடைத் தேர்தல் தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளன. அதன் காரணமாக இந்த இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவித்துள்ளது.
English Summary
Are there opportunities for those who contested again in Madhurantakam and Dharapuram constituencies or are there new candidates