எடப்பாடிக்கு எதிராக சி.வி. சண்முகம் எஸ்.பி. வேலுமணியுடன் புதிய வியூகம்? எடப்பாடிக்கு செக் வைக்கும் மாஜிகள்! - Seithipunal
Seithipunal


2026 சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய தலைவலி உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கோவை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புறக்கணித்த நிலையில், தற்போது விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகமும் பங்கேற்காதது அதிமுகவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு கட்சியின் பலவீனங்கள், மாவட்ட அளவிலான பிரச்சினைகள் மற்றும் எதிர்கால அரசியல் வியூகம் குறித்து மாவட்ட வாரியாக நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி கருத்து கேட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக சேலம், தஞ்சாவூர், சென்னை புறநகர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆனால், விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் அவரது அரசியல் நகர்வு குறித்து கட்சிக்குள் பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன.

சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி இணைந்து அதிமுகவில் தனி அணியாக செயல்பட முயற்சி செய்ததாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகின. பின்னர் அந்த முயற்சி கைவிடப்பட்டாலும், இருவரும் தொடர்ந்து ஒரே நிலைப்பாட்டில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு சி.வி. சண்முகத்திடம் இருந்து விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டு, புதிய மாவட்டச் செயலாளராக பசுபதி நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்களது பொறுப்புகளில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியானது.

அதேநேரத்தில், விழுப்புரம் மாவட்ட ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏராளமான நிர்வாகிகள் திரண்டு வந்து எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்ததும் கவனத்தை ஈர்த்தது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உண்மையான ஆதரவு யாருக்கு உள்ளது என்ற விவாதமும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

இந்நிலையில், சி.வி. சண்முகமும் எஸ்.பி. வேலுமணியும் இணைந்து அடுத்தகட்ட அரசியல் வியூகத்தை வகுத்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கலாமா அல்லது பாஜகவில் இணையலாமா என்பது குறித்து இருவரும் தீவிர ஆலோசனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், ஆளும் தரப்புடன் இணக்கமான அரசியல் அணுகுமுறையை கடைப்பிடித்து, சட்டப்பேரவையில் ஆதரவு நிலைப்பாட்டுடன் செயல்படுவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராக அதிமுகவில் மீண்டும் அதிருப்தி குரல்கள் எழத் தொடங்கியுள்ள நிலையில், சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி ஆகியோரின் அடுத்த அரசியல் நகர்வு கட்சிக்குள் புதிய மாற்றங்களை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Are CV Shanmugam and SP Velumani devising a new strategy against Edappadi Former ministers checkmate Edappadi


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




சினிமா

Seithipunal
--> -->