வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கல்லூரி மாணவி சடலமாக மீட்பு...! - காவல்துறையினர் தீவிர விசாரணை...!
College student found dead after hanging at home Police investigating intensively
தூத்துக்குடி பசுவந்தனை அருகே கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட நிலையில், அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து காவலர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.பசுவந்தனை அருகே உள்ள பரமன்பச்சேரி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் சமுத்திரவேல் (48). கொத்தனார் வேலை செய்து வரும் இவரது மனைவி மாரியம்மாள்.

இவர்களது மூத்த மகள் ஸ்ரீவள்ளி (18). இவர் சில்லாங்குளத்தில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு அறிவியல் பட்டப்படிப்பு படித்து வந்தார்.நேற்று முன்தினம் காலையில் சமுத்திரவேல் வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். அவரது மனைவி மாரியம்மாளும் ஆடு மேய்க்கும் பணிக்காக வெளியே சென்றுள்ளார்.
மாலையில் மாரியம்மாள் வீடு திரும்பியபோது, வீட்டிற்குள் ஸ்ரீவள்ளி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதனால் பதற்றமடைந்த அவர் சத்தமிட்டுள்ளார். உடனே அங்கு வந்த உறவினர்கள் உதவியுடன் மாணவியை கீழே இறக்கினர்.
ஆனால், அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பசுவந்தனை காவல் நிலைய காவலர்கள், மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, மாணவியின் தந்தை சமுத்திரவேல் அளித்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
மாணவி இந்த விபரீத முடிவை எடுத்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையேயும், அப்பகுதி மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
College student found dead after hanging at home Police investigating intensively