விநாயகர் சிலையில் முதலமைச்சர் விஜய் தோற்றம்...! உடனடியாக அகற்ற வேண்டும்...! - நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்...!
Chief Minister Vijay image Ganesha statue It should be removed immediately Nainar Nagendran strongly condemns
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை கொருக்குப்பேட்டையில் முதல்-அமைச்சர் விஜய்யின் உருவத் தோற்றத்தில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ள விவகாரம் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிலையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது,"சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, முழுமுதற் கடவுளாக போற்றப்படும் விநாயகப் பெருமானின் சிலை முதல்-அமைச்சர் விஜய்யின் தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு விநாயகர் சிலையை மாற்றியமைத்து வைத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.கோடிக்கணக்கான மக்கள் பக்தியுடன் வழிபடும் இறை உருவத்தை தனிநபரை முன்னிறுத்தும் வகையிலும், அரசியல் விளம்பரத்துக்காகவும் பயன்படுத்துவது மக்களின் ஆன்மிக உணர்வுகளை புண்படுத்தும் செயலாகும். புனிதத்தன்மை வாய்ந்த விநாயகர் சதுர்த்தி விழாவின் நோக்கத்தையே இது சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது.
இறை வழிபாட்டை அரசியல் சுயலாபத்துக்கான கருவியாக மாற்றுவதும், ஆன்மிக விழாவை தேர்தல் பிரசார மேடையாக பயன்படுத்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் ஆரம்பத்திலேயே கண்டனம் தெரிவிக்காமல் மவுனம் காத்ததே, இத்தகைய எல்லை மீறல்கள் தொடர்வதற்கு காரணமாக அமைந்துள்ளதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களின் மத உணர்வுகளையும் வழிபாட்டு மரபுகளையும் பாதிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள இதுபோன்ற விநாயகர் சிலைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இறை உருவங்களை தனிப்பட்ட சுயவிளம்பரத்துக்கும் அரசியல் நோக்கங்களுக்கும் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்படும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.இவ்வாறு அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Chief Minister Vijay image Ganesha statue It should be removed immediately Nainar Nagendran strongly condemns