முதலமைச்சர் விஜய்யை ஒருமையில் விமர்சித்த விவகாரம்...! - முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு...!
incident criticizing Chief Minister Vijay in unison Former Minister Sekarbabu booked under 7 sections
முதலமைச்சர் விஜய்யை ஒருமையில் விமர்சித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது, தி.மு.க. ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் குறித்து முதல்-அமைச்சர் விஜய் தனது உரையில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

குறிப்பாக, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கை, வீராணம் திட்டம் மற்றும் அமலாக்கத்துறை ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அவர் சுட்டிக்காட்டி, தி.மு.க.வினர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.இதுதவிர, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை என்றும் விஜய் தெரிவித்தார்.
மிசா குறித்து பேசும்போது, மு.க.ஸ்டாலினை சைகைகள் மூலம் கேலி செய்யும் வகையில் முதல்-அமைச்சர் விஜய் உடல்மொழியை வெளிப்படுத்தியதாக தி.மு.க. தரப்பினர் குற்றம்சாட்டினர்.
இதற்கு தி.மு.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.இந்த விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னையிலும் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்த சேகர்பாபு, அவரை ஒருமையில் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், சேகர்பாபுவின் பேச்சுக்கு கண்டனமும் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக நிர்வாகி அளித்த புகாரின் பேரில் சேகர்பாபு மீது வடக்கு கடற்கரை காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் அவமதித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக காவலர்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆர்ப்பாட்டத்தின்போது சேகர்பாபு பேசியது தொடர்பான தகவல்கள், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் ஏற்கனவே சூடுபிடித்திருந்த தமிழக அரசியல் களம், இந்த வழக்குப்பதிவால் மேலும் பரபரப்படைந்துள்ளது.
English Summary
incident criticizing Chief Minister Vijay in unison Former Minister Sekarbabu booked under 7 sections