பொய்வழக்கு போட்ட போலீசுக்கு ரூ 1 அபராதம்! சாதித்து காட்டிய அறப்போர் இயக்கம்!
Arappor iyakkam case Human Rights case TN Police
அறப்போர் இயக்கம் மீது தொடுத்தது மனித உரிமை மீறல்தான் என்று கூறி, காவல் ஆய்வாளருக்கும் உதவி ஆய்வயாருக்கும் ரூ 1 அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
2019 இல் முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது ஊழல் புகார் கொடுத்ததாலும் செம்மஞ்சேரி காவல் நிலையம் நீர்நிலையில் கட்டப்படுகிறது என்று புகார் அளித்ததாலும், கோபம் அடைந்த அப்போதைய காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் IPS தன் அதிகாரத்தை பயன்படுத்தி பல காவல் நிலையங்களில் அறப்போர் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் பதிவு செய்தார்.
கல்லுக்குட்டை ஏரியை பார்வையிட சென்ற அறப்போர் இயக்கத்தினர் 11 பேரை கைது செய்து மண்டபத்தில் தரமணி காவல் ஆய்வாளர் தேவராஜ் வைத்தார். பின்பு பொய் வழக்கும் போடப்பட்டது. இது போன்று அறப்போர் இயக்கம் மீது தொடர் பொய் வழக்குகள் போடப்பட்டது. ஆனால் அறப்போரின் சட்ட போராட்டங்களுக்கு பிறகு இந்த வழக்குகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
கல்லுக்குட்டை சட்டவிரோத மண்டப காவல் மற்றும் பொய் வழக்கு மீது மனித உரிமை மீறல் புகாரை அறப்போர் இயக்கம் ஜூலை 2019 இல் தொடுத்தது . ஆளுக்கு தலா ஒரு ரூபாய் நஷ்ட ஈடாக கேட்டு இருந்தோம். விசாரணைக்கு பிறகு மனித உரிமை ஆணையத்தின் விசாரணை அதிகாரி இதில் மனித உரிமை மீறல் நடந்து உள்ளது என்று அறிக்கை கொடுத்தார். அதன் பிறகு இதன் மீது மனித உரிமை ஆணையத்தின் விசாரணை (trial) துவங்கி சில மாதங்களுக்கு முன் முடிவுற்றது.
தற்பொழுது வெளிவந்துள்ள தீர்ப்பில் காவல் ஆய்வாளர் தேவராஜ் மற்றும் கவிதா மனித உரிமை மீறளில் ஈடுபட்டதாகவும் இனி இது போல செயல்பட கூடாது என்றும் நாம் கேட்ட நஷ்ட ஈடான தலா ஒரு ரூபாய் என்று 2 காவலர்களும் 11 தன்னார்வலர்களுக்கு மொத்தம் ரூ 22 வழங்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் தீர்ப்பில் தெரிவித்து உள்ளது.
இந்த ஒரு ரூபாய் என்பது அதிகாரத்தை துஷ்பிரியோகம் செய்யும் ஒவ்வொரு காவல் அதிகாரிக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும். மேல் அதிகாரிகள் சொன்னால் என்ன வேண்டுமானாலும் பொய் வழக்கு போடுவேன் என்று திரியும் காவல் துறை அதிகாரிகளுக்கு இது பாடமாக இருக்க வேண்டும். தேவரராஜும் கவிதாவும் கூண்டில் வந்து நிற்கும் பொழுது அவர்களை பொய் வழக்கு போட சொன்ன எந்த உயர் அதிகாரிகளும் உதவ வரவில்லை. அரசியல் சாசனம் படி சட்டபடி நடப்பதற்கே காவல்துறை பொது ஊழியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் உணர்ந்து நடக்க வேண்டும். உயர் அதிகாரிகள் பொய் வழக்கு போட சொன்னால் முடியாது என்று காவல் துறை ஆய்வாளர்கள் சொல்ல வேண்டும். தேவரராஜும் கவிதாவும் போல செயல்பட கூடாது என்பதற்கு இந்த தீர்ப்பு ஒரு உதாரணம்.
பல ஆண்டு சட்ட போராட்டம் பிறகு கிடைத்த வெற்றி இது. எங்களுக்கு வாதிட்ட வழக்கறிஞர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். தொடர்ந்து அறப்போர் செயல்பாடுகளை ஆதரித்து வரும் அனைவருக்கும் நன்றி என அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.
English Summary
Arappor iyakkam case Human Rights case TN Police