நீட் எதிர்ப்பு போராட்டம்!அனுமதி பெற்று போராடினாலும் கைதா?கொந்தளித்த சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி விழுப்புரத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மற்றும் அமைப்பினரைக் காவல்துறையினர் கைது செய்ததைக் கண்டித்து, சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் போராட்டக் களத்தில் இறங்கினார். காவல்துறையின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், அனுமதி பெற்று அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதையும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தி டெல்லியில் தொடங்கிய போராட்டத்திற்கு மாணவர்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் சென்னை, கோவை, மதுரை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்திலும் மாணவர்கள் மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விழுப்புரம் காவல்துறையினர் கைது செய்ததைத் தொடர்ந்து, சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மாணவர்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

மேலும், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இரவு 10 மணி வரை அமைதியான முறையில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டதாகவும், அதற்கு காவல்துறையும் அனுமதி வழங்கியிருந்ததாகவும் அவர் கூறினார்.

"தமிழகம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் அமைதியாக நடைபெற்று வருகின்றன. ஆனால் விழுப்புரத்தில் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை தாக்கி கைது செய்து மண்டபத்தில் அடைத்துள்ளனர். விழுப்புரம் காவல்துறை மட்டும் தனி அதிகாரத்துடன் செயல்படுகிறதா? இந்த நடவடிக்கைக்கு காரணமான அதிகாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவித்து, அவர்கள் மீண்டும் போராட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். இரவு 10 மணி வரை போராட்டம் தொடரும். மாவட்ட காவல்துறை, உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி செயல்பட வேண்டும்" என்று பெ.சண்முகம் வலியுறுத்தினார்.

இந்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், காவல்துறையின் நடவடிக்கையை எதிர்த்து அரசியல் மற்றும் மாணவர் அமைப்புகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Anti NEET protest Arrested despite protesting with permission CPM State Secretary P Shanmugam outraged


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->