'தரம் குறைந்த சைக்கிள்ககளை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய திமுக அரசு'; அண்ணாமலை கண்டனம்..! - Seithipunal
Seithipunal


திமுக அரசின் இலவச சைக்கிள் திட்டத்தின் கீழ், கோவையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சைக்கிள்கள், தரமற்ற உதிரிபாகங்களுடன் வழங்கப்பட்டுள்ளதாக பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 

''கோவை ஒண்டிப்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 11ம் வகுப்பு மாணவர்கள் 117 பேருக்கு, கோவை எம்பி மற்றும் மாவட்ட கலெக்டர் பங்கேற்று வழங்கிய சைக்கிள்கள், சரியாகப் பொருத்தப்படாமலும், சில உதிரிபாகங்கள் இல்லாமலும் வழங்கப்பட்டுள்ளன. தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சைக்கிள்கள், இப்படி தரமற்ற உதிரிபாகங்களுடன் வழங்கப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கடந்த ஆண்டுகளிலும், இது போன்ற தரம் குறைந்த சைக்கிள்கள் வழங்கப்பட்டதால், மாணவர்கள் அவற்றை நீண்ட காலம் பயன்படுத்த முடியாமல், தங்கள் சொந்த செலவில் பழுது பார்த்தும், பல மாணவர்கள் அவற்றை விற்பனை செய்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. ஒவ்வொரு ஆண்டும், குறிப்பாக கோவை மாவட்டத்தில் இதே பிரச்சினை தொடர்கிறது. இந்த சைக்கிள் ஒப்பந்ததாரர்கள் யார்? ஏன் தொடர்ந்து தரம் குறைந்த சைக்கிள்கள் கோவை பள்ளி மாணவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன?

கோவையில் மட்டும் இந்த ஆண்டு, 17,782 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொன்றும் சுமார் 4 ஆயிரத்து 300 ரூபாய் விலை என்று திமுக அரசால் கூறப்படும் சைக்கிள்கள், இப்படி அடிப்படைக் குறைபாடுகளைக் கூட சரிசெய்யாமல் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

கோவை மட்டுமின்றி, தமிழகம் முழுவதுமே, அனைத்து சைக்கிள்களும், தர பரிசோதனை நடத்திய பின்னரே வழங்கப்பட வேண்டும் என்றும், தரம்குறைந்த சைக்கிள்கள் வழங்கும் ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்று அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annamalai condemns providing low quality free bicycles to government school students


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->