அமமுக இருப்பது பாஜக கூட்டணியில்தான்..அதிமுக கூட்டணியில் இல்லை!பாஜக மூலம் தான் பேசுவோம்.. மீண்டும் குட்டையை கிளப்பும் டிடிவி தினகரன்!
AMMK is in the BJP alliance not in the AIADMK alliance We will only talk through the BJP TTV Dhinakaran is stirring up trouble again
தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தொகுதி பங்கீடு, கூட்டணி கணக்கீடு, வாக்குறுதிகள், பிரச்சார வேலைகள் என பரபரப்பு அதிகரித்துள்ளது. இந்த சூழலில் அதிமுக–அமமுக இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக கருத்து வேறுபாடு நிலவி வருவதாக கூறப்படும் நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், தேசிய ஜனநாயக கூட்டணியில் “அம்மாவின் தொண்டர்கள் 99.9 சதவீதம் பேர் ஓரணியில் திரண்டுள்ளனர்” எனக் கூறினார். திமுக அரசை மக்கள் விரோத ஆட்சியாக விமர்சித்த அவர், அதை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைந்துள்ளதாக தெரிவித்தார்.
“சிலர் விலகியிருக்கலாம்; ஆனால் சீப்பை ஒளித்து வைப்பதால் கல்யாணம் நின்றுவிடாது. புரட்சி தலைவர் மற்றும் புரட்சி தலைவியின் ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி மூலம் மீண்டும் கொண்டு வருவோம்” என்றார்.
அமமுக–அதிமுக இணைப்பு குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த தினகரன், “நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில், தேசிய அளவில் பாஜக தலைமையிலும், தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலும் இணைந்துள்ளோம். அமமுகவும் அதிமுகவும் அம்மாவால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள். கருத்து வேறுபாடுகளை மறந்து ஓரணியில் இணைந்துள்ளோம்” என்றார்.
தொகுதி பங்கீடு தொடர்பாக அவர் கூறியதாவது:
“கூட்டணியில் தொகுதி உடன்பாடு என்பது மிகவும் சென்சிட்டிவான விஷயம். அதை சுமுகமாக முடிக்க வேண்டும். அதனால் தான் எங்களுக்கான தொகுதிகளை பாஜக மூலம் அதிமுகவிடம் பேசி நல்ல முறையில் நிறைவு செய்வோம் என்று கூறினேன். எந்த சின்ன மனவருத்தத்துக்கும் இடமளிக்கக் கூடாது என்பதே எங்களின் நோக்கம்.”
மேலும், “அமமுகவிற்கு தேவையான இடங்களை கௌரவமான முறையில் பெறுவதற்கு பாஜக வழிநடத்துதலில் உடன்படிக்கை எட்டுவோம். அதிமுக கூட்டணியில் இடங்களை பெற்று, எங்கள் வேட்பாளர்கள் போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு செல்வார்கள்” என தினகரன் தெரிவித்தார்.
அமமுக–அதிமுக இடையே தொகுதி பங்கீடு விவகாரம் பாஜக வழியாக முடிவு செய்யப்படும் என தினகரன் கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த கூட்டணிக் கணக்கீடுகள் எந்த திசையில் நகரும் என்பது கவனிக்கப்பட வேண்டிய அம்சமாக உள்ளது.
English Summary
AMMK is in the BJP alliance not in the AIADMK alliance We will only talk through the BJP TTV Dhinakaran is stirring up trouble again