தேர்தல் வருது..இதுதான் சரியான நேரம்! ஃபைல்களை தூசி தட்டும் டெல்லி.. திமுக தலைகளை சுத்து போடும் பாஜக!
Elections are coming this is the right time Delhi will dust off the files BJP will pound DMK heads
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்களைச் சுற்றியுள்ள வழக்குகள் மீண்டும் வேகமெடுத்துள்ளன. குறிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் தீவிரமாக விசாரிக்கப்படுவது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
2011ஆம் ஆண்டு கொளத்தூர் சட்டப்பேரவைத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து, அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் திடீரென விசாரணைக்கு எடுக்கப்பட்டது. நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்னோய் அமர்வு வழக்கை விசாரித்தது.
விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் முரண்பாடுகள் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். “கடந்த இரண்டு மாதங்களாக செய்யாத பணியை ஒரு நாளில் முடிக்க முடியுமா?” என்று கூடுதல் அவகாசம் கோரிய வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சைதை துரைசாமி, 2011 தேர்தலில் ‘திருமங்கலம் பார்முலா’ பயன்படுத்தி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இதற்கான வீடியோ மற்றும் புகைப்பட சிடிக்கள் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால், அவற்றுக்கு இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 65B-ன் கீழ் தேவையான சான்றிதழ் இணைக்கப்படவில்லை என்பதால், சென்னை உயர்நீதிமன்றம் 2017ல் வழக்கை தள்ளுபடி செய்தது.
தற்போது, 65B சான்றிதழ் இல்லாத தொழில்நுட்ப காரணத்தைத் தாண்டி, வீடியோக்களின் உண்மைத்தன்மையை ஆராயலாமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் பரிசீலித்து வருகிறது. விசாரணை நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிரான ‘வேலைக்கு லஞ்சம்’ புகார் தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமலாக்கத்துறை (ED) வழங்கிய ஆவணங்கள் குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய போதுமானதாக உள்ளன என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. ‘விரிவான விசாரணை’ என்ற பெயரில் காலதாமதம் ஏன் எனவும் கேள்வி எழுப்பியது. முதற்கட்ட விசாரணை மட்டும் போதாது, ஆதாரங்களின் அடிப்படையில் உடனடி FIR பதிவு அவசியம் என நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழக அரசு தரப்பு, ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 17A-ன் கீழ் அனுமதி பெற்று விசாரணை நடைபெற்று வருவதாக விளக்கமளித்தாலும், அமலாக்கத்துறை வழங்கியவை வெறும் தகவல்கள் அல்ல, உறுதியான ஆதாரங்கள் என நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக டாப் தலைவர்களுக்கு எதிரான வழக்குகள் மீண்டும் தீவிரமடைவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும் சில அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளையும் விரைவுபடுத்த மத்திய தரப்பில் ஆலோசனை நடந்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதனால், வரவிருக்கும் தேர்தல் சூழலில் சட்ட மற்றும் அரசியல் பரபரப்பு மேலும் அதிகரிக்கலாம் என்றே மதிப்பிடப்படுகிறது.
English Summary
Elections are coming this is the right time Delhi will dust off the files BJP will pound DMK heads