நாட்டின் கூட்டுறவுத் துறையை மேம்படுத்துவது குறித்து மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர்களுடன் அமித் ஷா ஆலோசனை..!
Amit Shah discusses with state cooperative ministers on improving the countrys cooperative sector
நாட்டின் கூட்டுறவுத் துறையை மேம்படுத்துவது குறித்து மாநில அமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திர் மாநாட்டு மையத்தில் 'மந்தன் பைடக்' என்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த கூட்டுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்த கூட்டத்தில், நாட்டின் கூட்டுறவுத் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய சீர்திருத்தங்கள் மற்றும் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. நாடு முழுவதும் 02 லட்சம் புதிய பல்நோக்கு தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களை உருவாக்குவது குறித்தும், வரவிருக்கும் இந்த ஆண்டு முதல் 2045-ஆம் ஆண்டு வரையிலான தேசிய கூட்டுறவு கொள்கையை இறுதி செய்வது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

குறிப்பாக கூட்டுறவுத் துறையில் கணினி தொழில்நுட்பத்தைப் கொண்டுவருவது மற்றும் உலகின் மிகப்பெரிய தானியக் கிடங்குத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படவுள்ளது. இதற்கு முன்னதாக குஜராத் சென்ற அமித் ஷா, வதோதராவில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்றார்.
அங்கு மின்னணு நாணயம் அடிப்படையிலான ரேஷன் கூப்பன் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். கூட்டுறவு வங்கிகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் மாநில கூட்டுறவுச் சட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து அமைச்சர்களுடன் அமித் ஷா விரிவாகக் கலந்துரையாடவுள்ளார்.
English Summary
Amit Shah discusses with state cooperative ministers on improving the countrys cooperative sector