சட்டசபையில் புயலைக் கிளப்பிய ‘அம்பேத்கர் அயலக கல்வி நிதி’ விவகாரம்! – தேதிவாரியாக கணக்கு கொடுத்து அமைச்சர் வன்னி அரசு விளக்கம்!
Ambedkar Ayyalaka Education Fund issue Assembly Minister Vanni government explains by providing date wise accounts
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு சட்டசபையில் பரபரப்பை ஏற்படுத்தியது. மலேசியாவில் கல்வி பயின்று வரும் தமிழக மாணவர் ஒருவர் தனக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை என காணொலி வெளியிட்டிருந்த நிலையில், இதற்கு அமைச்சர் வன்னி அரசு மறுப்பு தெரிவித்தார்.
மாணவருக்கு இதுவரை அரசு சார்பில் வழங்கப்பட்ட நிதி தொடர்பான விவரங்களை தேதிவாரியாக சுட்டிக்காட்டிய அமைச்சர், அந்த மாணவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என்றும், அரசியல் உள்நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.


இந்த ஆண்டுக்கான கல்வி உதவித்தொகையை பெறுவதற்கு தேவையான ஆவணங்களை மாணவர் முறையாக சமர்ப்பிக்கவில்லை என்றும் அமைச்சர் விளக்கம் அளித்தார். இதனை முழுமையாக ஆய்வு செய்யாமல் சில அரசியல் கட்சிகள் அரசை குற்றம்சாட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மாணவரின் கல்வி நலனுக்காக இதுவரை ரூ.48 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். முதல் ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ.31 லட்சம் வழங்கப்பட்ட நிலையில், அதற்கான தேவையான ஆவணங்களை 10 மாதங்களாகியும் மாணவர் சமர்ப்பிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.மற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைத்துவிட்ட நிலையில், தனக்கு மட்டும் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை என்பதே சம்பந்தப்பட்ட மாணவரின் குற்றச்சாட்டு எனவும் அமைச்சர் விளக்கமளித்தார்.
இதற்கு பதிலளித்த கோவி செழியன், தி.மு.க. ஆட்சியில் மாணவருக்கு வழங்கப்பட்ட நிதி விவரங்களையே அமைச்சர் தேதிவாரியாக வாசித்ததாகவும், ஆனால் மாணவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதில் அளிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.இதையடுத்து அமைச்சர் வன்னி அரசு பேசுகையில், மாணவருக்கு கடந்த ஆட்சிக் காலத்திலேயே நிதி வழங்கப்பட்டதைத் தான் தெளிவாக குறிப்பிட்டதாக தெரிவித்தார்.
மேலும், தான் சமூகநீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான நிதி மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.முந்தைய ஆட்சிக் காலத்தில் 500 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கே உதவித்தொகை வழங்கப்பட்டதாகவும், தான் பொறுப்பேற்ற பிறகு திட்டத்தின் நிதி ஒதுக்கீடு மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்திற்காக தி.மு.க. ஆட்சியில் ரூ.84 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தவெக ஆட்சியில் ரூ.131 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அயலக கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்த அனைத்து தகுதியான மாணவர்களுக்கும் உதவித்தொகை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளில் கல்வி பயிலும் தமிழக மாணவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில் அரசு செயல்படும் என்றும் அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.
English Summary
Ambedkar Ayyalaka Education Fund issue Assembly Minister Vanni government explains by providing date wise accounts