புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அதிமுக அன்பழகன் தேர்வு; அமைச்சர் பதவிற்கு கடும் போட்டி; குழப்பத்தில் தேஜ கூட்டணி..! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தேஜ கூட்டணி ஆட்சியில் முதல்வராக ரங்கசாமி நேற்று 05 வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் இரண்டு அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், மீதமுள்ள 03 அமைச்சர்கள் யார், யார்? என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

நேற்று பாஜகவைச் சேர்ந்த நமச்சிவாயம் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். கடந்த 11-ஆம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து அமைச்சரவை பட்டியலை கொடுத்தார். அதில் பாஜகவைச் சேர்ந்த நமச்சிவாயம், ஜி.என்.எஸ்.ராஜசேகரன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்டது. அத்துடன், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மல்லாடி கிருஷ்ணாராவ், ராஜவேலு, நாராயணசாமி ஆகியோரின் பெயர்களும் அமைச்சரவை பட்டியலில் உள்ளதாக தகவல் வெளியாகின.

இந்த சூழலில், லஜக தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், தனக்கும் அமைச்சர் பதவி வேண்டுமென டெல்லி சென்று பாஜமேலிட தலைவர்களை சந்தித்து வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.  அத்துடன், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த எம்எல்ஏக்கள் சிலரும் தங்களுக்கு அமைச்சர் பதவி கேட்டு தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமியிடம் வலியுறுத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனை தொடர்ந்து, ரங்கசாமி முதல்வராக பதவியேற்புக்கு முன்பு நேற்று முன்தினம் மாலை மீண்டும் ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து இவ்விவகாரம் தொடர்பாக பேசியபோது, ஏற்கனவே, வழங்கியிருந்த அமைச்சர் பட்டியலை மாற்றி வழங்கியதாக தெரிகிறது.

அதன்படி முதல்கட்டமாக முதல்வர் மற்றும் 02 அமைச்சர்கள் மட்டுமே நேற்று பதவியேற்றுக் கொண்டனர். இன்னும் 03 பேருக்கு அமைச்சர்கள் பதவி வழங்க வேண்டும். வருகிற 20-ஆம் தேதிக்குள் அவர்களும் பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்பதவிகளை பிடிக்க பாஜ, என்ஆர் காங்கிரசில் மட்டுமின்றி லஜக, அதிமுக எம்எல்ஏக்களிடமும் கடும் போட்டி நிலவுவதால், தேஜ கூட்டணி யாருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது என குழப்பத்தில் உள்ளது.


 

இது ஒருபுறமிருக்க புதுச்சேரி சட்டசபையில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்க, தற்காலிக சபாநாயகராக (அதிமுக அன்பழகன்) நியமிப்பதற்கான கோப்பை முதலமைச்சர் ரங்கசாமி, ஆளுநர் மாளிகைக்கு நேற்று மாலை அனுப்பி வைத்துளாளர். இதனை ஆளுநர் கைலாஷ்நாதன் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கிருந்து அனுமதி கிடைத்தவுடன் தற்காலிக சபாநாயகர் உடனே நியமிக்கப்பட்டு, அவருக்கு ஆளுநர் கைலாஷ்நாதன் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்று கூறப்படுகிறது.

அதனபடி, இன்று (வியாழக்கிழமை) மாலை தற்காலிக சபாநாயகர் பதவி ஏற்க வாய்ப்பு உள்ளதாகவும் புதுச்சேரி அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்பின்னர் சட்டசபை கூட்டப்பட்டு புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்றுக் கொள்வார்கள். பின்னர் புதிய சபாநாயகரை பிரதான எண்ணிக்கை கொண்டுள்ள கட்சிகள் முன்மொழிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்வு செய்வர். அதன்பிறகு துணை சபாநாயகர் தேர்தல் நடத்தப்படவுள்ளது. 

இதேநேரம், புதிதாக கூடும் 16-வது சட்டப்பேரவைக்கு எதிர்க்கட்சி தலைவராக திமுக நாஜிம் அறிவிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் 12, பாஜக 04, அதிமுக, லஜக தலா 01 தொகுதிகளை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMKs Anbalagan Selected as Pro tem Speaker in Puducherry


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->