பாஜக இருக்கும்வரை அதிமுக தேறாது! ஃபியூஸ் போன பியூஸ் கோயல் கூட்டணி திட்டம்..அப்ப திமுகவுக்கு மாற்று விஜய்தானா?
AIADMK will not win as long as BJP exists Piyush Goyal alliance plan has failed so is Vijay an alternative to DMK
“தேமுதிகவின் வாக்கு வங்கி தற்போது 1 சதவீதத்துக்கும் கீழ் சரிந்துள்ளதால், கட்சி தன்னுடைய அரசியல் அடையாளத்தை தக்கவைக்க திமுக கூட்டணியில் இணைவதையே ஒரு வாய்ப்பாக பார்க்கிறது. தேமுதிக மட்டுமல்ல, பல சிறிய கட்சிகளும் திமுகவுடன் கூட்டணி வைக்கவே முனைப்பு காட்டுகின்றன,” என்று அரசியல் விமர்சகர் ராஜ கம்பீரன் தெரிவித்துள்ளார்.
யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் தமிழக அரசியல் நிலவரம் குறித்து விரிவாக பேசினார். அதில், “டிடிவி தினகரனுக்கு 6 தொகுதிகள், ஓ. பன்னீர்செல்வத்திற்கு 3 தொகுதிகள் வழங்கப்படலாம் என்று பியூஷ் கோயல் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்ற தகவல் வெளியானது. ஆனால் அந்த ஏற்பாட்டை ஓபிஎஸ் தரப்பு முற்றிலுமாக நிராகரித்துவிட்டது. எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்குவது தங்களுக்கு அவமானம் என்று அவர்கள் தெளிவாக அறிவித்துள்ளனர்,” என்றார்.
மேலும், “டிடிவி தினகரனும் தனக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக வந்த செய்திகள் முற்றிலும் வதந்தி என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதனால், பியூஷ் கோயலின் கூட்டணி திட்டம் தொடங்கியதுமே தோல்வியடைந்தது,” என்றும் ராஜ கம்பீரன் கூறினார்.
அதிமுக தற்போது தொடர்ச்சியான சரிவை சந்தித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், “எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான பிறகு சசிகலாவை முழுமையாக புறக்கணித்தார். கொடநாடு விவகாரத்தில் முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இருவருக்கும் எடப்பாடி மீது கடும் கோபம் இன்னும் நீடிக்கிறது. அவரது தயவால் எம்எல்ஏ ஆக வேண்டிய அவசியமில்லை என்பதே அவர்களின் நிலைப்பாடு. எடப்பாடி தலைமையை தகர்ப்பதே அவர்களின் முதன்மை நோக்கம்,” என்றார்.
தென் மாவட்ட அரசியலை பற்றி பேசிய ராஜ கம்பீரன், “முக்குலத்தோர், முத்தரையர் சமூகங்களின் வாக்கு வங்கியில் சுமார் 80 சதவீதத்தை திமுக தன் பக்கம் ஈர்த்து வருகிறது. மைக்ரோ லெவலில் சாதி அடிப்படையிலான அரசியலை திமுக திட்டமிட்டு முன்னெடுத்து வருகிறது. மெய்யநாதன் போன்றவர்களை அமைச்சராக்கியதும் அதற்கான எடுத்துக்காட்டுதான்,” என்றார்.
ராமநாதபுரம் தொகுதி குறித்து அவர் கூறியதாவது: “கடந்த தேர்தலில் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சையாக நின்று சுமார் 3.36 லட்சம் வாக்குகளை பெற்றார். தேர்தலுக்கு 20 நாட்களுக்கு முன்புதான் அவர் அறிவிக்கப்பட்டார். பலாப்பழம் சின்னம் மக்களுக்கு பரிச்சயமில்லை. ‘பன்னீர்செல்வம்’ என்ற பெயரில் பல சுயேட்சைகள் நிறுத்தப்பட்டு குழப்பம் ஏற்படுத்தப்பட்டபோதும், அவர் அந்த அளவு வாக்குகளை பெற்றார். ஆனால் அதிமுக அந்த தொகுதியில் டெபாசிட் இழந்தது,” என்றார்.
“அதிமுக இனியும் தேறாது என்பதை உணர்ந்துதான் அன்வர் ராஜா போன்ற தலைவர்கள் கட்சியில் மரியாதை இல்லை என்று கூறி வெளியேறுகிறார்கள். பாஜக இருக்கும் வரை அதிமுக மீண்டும் எழுவது கடினம். பாஜக தலைமையிலான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துவிட்டன. இதுவரை எந்த முக்கிய கட்சியும் அந்த கூட்டணிக்கு வரவில்லை,” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேமுதிக குறித்து அவர் கூறுகையில், “தேமுதிகவின் வாக்கு வங்கி 1 சதவீதத்துக்கும் கீழே போய்விட்டது. அதனால், கட்சியின் அடையாளத்தை காப்பாற்ற திமுக கூட்டணியில் சேரலாமா என்று அவர்கள் யோசிக்கிறார்கள். இது தேமுதிகக்கு மட்டும் அல்ல; பல கட்சிகளும் திமுகவையே பாதுகாப்பான தளம் என பார்க்கின்றன,” என்றார்.
மேலும் அவர், “அதிமுக வீழ்ச்சியில் உள்ளது. விஜய் பனையூர் பங்களாவில் அமைதியாக இருக்கிறார். நாம் தமிழர் கட்சி தனி பாதையில் செல்கிறது. இந்நிலையில் திமுகவுக்கு மாற்றாக வலுவான எதிர்க்கட்சி இல்லாததே தமிழக ஜனநாயகத்தின் பெரிய வீழ்ச்சி. ஒருகாலத்தில் திமுகவுக்கு நிகராக இருந்த அதிமுக, இன்று மண் குதிரை ஆற்றில் கரைவது போல தேய்ந்து கொண்டிருக்கிறது,” என்று விமர்சித்தார்.
பாஜக குறித்தும் கடுமையாக பேசிய அவர், “அதிமுகவை ஒழித்தாலும் பாஜக தமிழகத்தில் வேரூன்ற முடியாது. பியூஷ் கோயல் காலையில் வந்து மாலையில் கிளம்புவதற்குள், அவரது அனைத்து திட்டங்களும் ‘பியூஸ்’ போய்விட்டன,” என்று கூறினார்.
இந்த பேட்டி தமிழக அரசியல் சூழலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
English Summary
AIADMK will not win as long as BJP exists Piyush Goyal alliance plan has failed so is Vijay an alternative to DMK