அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்பு: சபாநாயகரிடம் அளித்த தகுதி நீக்க மனுக்கள் வாபஸ்!
AIADMK Factions Merge Disqualification Petitions Withdrawn Before Speaker
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி (இ.பி.எஸ்) தலைமைக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததால், கொறடா உத்தரவை மீறியதாக அவர்களைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி இ.பி.எஸ் தரப்பில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் மனு அளிக்கப்பட்டது. மறுபுறம், தங்களுக்குப் பெரும்பான்மை உள்ளதாகக் கூறி எஸ்.பி.வேலுமணி தரப்பும் தனியாக மனு அளித்திருந்தது.
மனுக்களை வாபஸ் பெற மே 28 வரை கால அவகாசம் இருந்த நிலையில், எம்.எல்.ஏ. பதவியைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் இ.பி.எஸ்-உடன் சமரசமாகச் செல்ல முடிவு செய்தனர். இன்று சென்னை சி.வி.சண்முகம் அலுவலகத்தில் வேலுமணி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்ட பின், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பசுமை வழிச்சாலையிலுள்ள இ.பி.எஸ் இல்லத்திற்குச் சென்று அ.தி.மு.க.வில் ஒரே அணியாக இணைந்தனர். எனினும், மன்னிப்புக் கடிதம் கேட்கப்பட்டதால் அதிருப்தியடைந்த சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவில்லை.
இணைப்பைத் தொடர்ந்து, சட்டமன்றக் குழுத் தலைவர், கொறடா அங்கீகாரம் மற்றும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி இருதரப்பும் சபாநாயகரிடம் அளித்திருந்த அனைத்து மனுக்களும் முறைப்படி திரும்பப் பெறப்பட்டன. இந்த இணைப்பின் மூலம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை தற்போது 42 ஆக உயர்ந்துள்ளது. மோதல் முடிவுக்கு வந்ததால் அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
English Summary
AIADMK Factions Merge Disqualification Petitions Withdrawn Before Speaker