அண்ணாமலையுடன் நெருக்கம்.. "24 மணி நேரத்தில் பாய்ந்த நடவடிக்கை".. அதிரடி காட்டிய ஈபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பிறந்த நாளை ஒட்டி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த 39 ஜோடிகளுக்கு திருமணத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று நடத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜகவை சேர்ந்த மாநில மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி நடத்திய இந்த திருமண நிகழ்ச்சியானது அதிமுக நிர்வாகியின் ஏற்பாட்டில் நடைபெற்றதாக தெரியவந்ததை அடுத்து அவர் அதிமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் "கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு கலங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் விழுப்புரம் மாவட்ட புரட்சி தலைவி பேரவை செயலாளர் முரளி என்கிற ரகுராமன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன்" என அந்த அறிவிப்பில் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அதிமுக நிர்வாகிகளுக்கும் இடையிலான கருத்து மோதல் ஏற்பட்டு தற்பொழுது அடங்கியுள்ள நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர் அண்ணாமலை தலைமையில் திருமண நிகழ்ச்சி நடத்தியதால் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கி இருப்பது மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற பொது தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக அதிமுகவின் உறுப்பினர் சேர்க்கை, மதுரை மாநாடு என அதிமுகவினர் மும்முறமாக தயாராகி வருகின்றனர். இதற்கிடையே அதிமுகவிற்குள் அண்ணாமலை குழப்பம் ஏற்படுத்தும் வகையில் அண்ணாமலையின் செயல்பாடு அமைந்துள்ளதாக அதிமுக நிர்வாகிகள் முனுமுனுக்கின்றனர். மேலும் இந்த விவகாரம் அதிமுக பாஜக கூட்டணியில் விரிசலை அதிகரிக்கச் செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிமுகவின் பொதுச்செயலாளராக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது சசிகலாவுக்கு பேரவை தொடங்கிய சில அமைச்சர்களின் பதவியை பறித்ததோடு கட்சியில் இருந்தும் நீக்கி அதிரடி காட்டினார். அதே பாணியில் தற்பொழுது அதிமுகவுக்கு எதிராக செயல்பட்ட மாவட்டச் செயலாளரை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கி இருப்பது பழைய அதிமுகவை நினைவுபடுத்துவதாகவும் அதிமுகவினர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK executive sacked for free wedding on Annamalai birthday


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->