அல்லு வுடுதா! அதிமுக -பாஜக கூட்டணிக்கு சட்டசபை தேர்தலை பார்த்து விஷக்காய்ச்சலே வந்துவிட்டது! - பி.கே சேகர்பாபு
AIADMK BJP alliance has become poisoned after watching assembly elections PK Sekarbabu
திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் தேரோட்டத்தை தொடங்கி வைக்கப்பட்டது.அதன் பிறகு, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் பேட்டியளித்தபோது தெரிவித்ததாவது,"நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவில் ஆனிப்பெருந்திருவிழாவையொட்டி 519-வது ஆண்டு தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட சிறு, சிறு சிக்கல்கள் இந்த ஆண்டு உருவாகாமல் இருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.ரூ.59 லட்சம் மதிப்பில் புதிதாக சண்டிகேஸ்வரர் தேர் செய்யப்பட்டுள்ளது. ரூ. 43 லட்சம் மதிப்பில் சுவாமி மற்றும் அம்பாள், விநாயகர் தேர்களுக்கு மரக்குதிரைகள் உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளன.ரூ.6 லட்சம் மதிப்பில் புதிதாக தேர்வடங்கள் வாங்கப்பட்டுள்ளன. சாலைகள் புனரமைப்பு உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டு தேரோட்டம் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்பு ரூ.75 கோடி மதிப்பில் 130 கோவிலில் 134 மரத்தேர்கள் புதிதாக செய்யப்பட்டுள்ளன. ரூ.19 கோடி மதிப்பில் 72 கோவிலில் 75 மர தேர்கள் பராமரிப்பு செய்யப்பட்டுள்ளன.முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வாழ்ந்த தமிழகத்தில், முன்னோர் களது வழியில் ஆட்சி செய்யும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில், ரூ.30 கோடியில் 197 திருத்தேர் பாதுகாப்பு கொட்டகைகள் அமைக்கப்பட்டு மழையிலும், வெயிலிலும் தேர்கள் சேதமாகாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது.
ரூ.31 கோடியில் 5 கோவில்களில் தங்கத் தேர்கள் திருப்பணி நடைபெற்றுள்ளது. ரூ.29 கோடியில் 9 புதிய வெள்ளித்தேர்கள் செய்யும் பணி தொடங்கப்பட்டு அதில் 2 தேர்கள் பக்தர்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.150 ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த சில தேரோட்டம் தி.மு.க. ஆட்சியில் அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து பேசி மீண்டும் நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.அ.தி.மு.க.வுக்கு கூடிய கூட்டத்தால் முதலமைச்சருக்கு ஜுரம் என்று கூறி இருப்பது நகைப்புக்குரியது.
திருச்செந்தூரில் நேற்று நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கூடிய கூட்டத்தைப் பார்த்து அவர்கள் மிரண்டு போய் உள்ளனர். மீண்டும் தி.மு.க. ஆட்சி வரும் என திருச்செந்தூரில் திரண்ட மக்கள் கூட்டம் கூறி உள்ளது.2026 சட்டமன்ற தேர்தலை பார்த்து அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கு தான் விஷக்காய்ச்சல் வந்துள்ளது.தமிழக திருக்கோவில்களில் உள்ள ஓலைச் சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் அறநிலைத்துறை உதவியுடன் செய்யப்பட்டு வருகிறது.
சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள் படி எடுக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஓலைச்சுவடிகளை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.எல்லோருக்கும் எல்லாம் வழங்கும் அரசாக திராவிட மாடல் அரசு விளங்கி வருகிறது.
நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் மதச்சார்பின்றி இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ நண்பர்களும் பங்கேற்று சிறப்பித்துள்ளனர். இந்த ஒற்றுமை எந்நாளும் தொடர, மக்கள் மீண்டும் தி.மு.க. ஆட்சி மலர வாய்ப்பு அளிக்க வேண்டும். அதற்கு அருள்மிகு நெல்லை யப்பரும் அருள்பாலிப்பார் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
AIADMK BJP alliance has become poisoned after watching assembly elections PK Sekarbabu