அதிமுகவில் பதற்றத்தை கிளப்பிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம்!
ADMK EPS SENGOTTAIYAN
அதிமுகவில் பதற்றத்தை கிளப்பிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில், அதிமுகவில் இருந்து பிரிந்த தலைவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் எனக் கோரி, இதற்காக 10 நாட்கள் கெடு விதித்தார் செங்கோட்டையன். அவர் வைத்திருந்த இந்த நிபந்தனை, கட்சியின் உள்நிலை விவாதங்களை தீவிரப்படுத்தியது.
இதையடுத்து, பிரசாரப் பயணத்தில் இருந்த பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கலில் முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். எஸ்.பி. வேலுமணி, முனுசாமி உள்ளிட்ட மூத்தோர் கலந்துகொண்ட இந்த ஆலோசனையில், கட்சியின் ஒற்றுமை மற்றும் கட்டுப்பாட்டை பாதுகாக்கும் வகையில் முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, செங்கோட்டையன் வகித்திருந்த அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி நேரடியாக வெளியிட்டுள்ளார்.
செங்கோட்டையன் நீக்கப்பட்டதால், அவரது அரசியல் நிலைப்பாடு குறித்து புதிய கேள்விகள் எழுந்துள்ளன. அதிமுக உள்கட்டமைப்பில் ஒற்றுமை வலுப்படுத்தப்படுமா அல்லது மேலும் பிளவு ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.