விஜயுடன் டிடிவி.. நான்காக பிரிந்த அதிமுக... இப்படியே தேர்தலை சந்தித்தால் தோல்வி உறுதி - சொல்கிறார் புகழேந்தி!
ADMK Election 2026 bangalore pugazhendhi
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூரு புகழேந்தி, அதிமுக பிரிந்து இருந்தால் திமுக எளிதில் வெற்றி பெறும் என்றும், அதிமுக 4-வது இடத்துக்கு தள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: விஜய் மாநாடு எழுச்சியூட்டியது. இளைஞர்கள் அவரின் எதிர்காலத்தைக் காட்டுகிறார்கள். தொகுதி வாரியாக விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டால் அவரது பலம் மேலும் உயரும். தேமுதிக தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியது, அமமுகவும் தனியாக்கப்படலாம். எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோருக்கு மக்கள் தானாகக் கூடினர். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கான கூட்டம் பணம் கொடுத்து சேர்க்கப்படுகிறது.
பாஜகவினர் ஆர்எஸ்எஸ் கொள்கையை பின்பற்றினால் தவறு இல்லை என்கிறார்கள். அதே நேரத்தில், திராவிட கொள்கையை அவர்கள் ஏற்குமா? அமித்ஷா கூட்டணி ஆட்சிதான் என்கிறார். அதற்கு எடப்பாடி பழனிசாமி எந்த பதிலும் அளிக்கவில்லை.
அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒரே மேடையில் தோன்றினாலும், அவர்களுக்குள் ஒருமித்த நிலை இல்லை. அதிமுக ஒருங்கிணைப்பைப் பற்றி பேசுவோர், செயல்பாட்டில் இறங்கவில்லை. சசிகலா வீட்டுக்குள் அமர்ந்திருப்பது ஒருங்கிணைப்புக்கு உதவாது. அதற்கு உடனடி நடவடிக்கை தேவை.
டிடிவி தினகரன் கூட்டணியிலிருந்து விலகி விஜயுடன் இணைய விரும்புகிறார். அதிமுக வலுவாக இருந்தால்தான் வெற்றி சாத்தியம். பிரிந்திருந்தால் சீமானே எடப்பாடிக்கு போட்டியாகிவிடுவார்.
இந்நிலையில், அதிமுக சின்னம் தொடர்பான வழக்கு ஜனவரியில் மீண்டும் விசாரணைக்கு வரும். இரட்டை இலை சின்னம் இன்னும் தீர்க்கப்படாத நிலையில் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
English Summary
ADMK Election 2026 bangalore pugazhendhi