அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "'Greatest journey begins with a single step'
எனச் சொல்லுவார்கள். பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் பாதம் தொட்டு, அவர்களின் கொள்கைகளின் அடிப்படையில் எனது "மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்"" என்ற உயரிய லட்சியத்துடன் கோவையில் கடந்த ஜூலை 7-ஆம் தேதி எனது எழுச்சிப் பயணத்தை தொடங்கினேன்.
கோவை மேட்டுப்பாளையத்தில் தொடங்கிய எனது பயணத்தில், இதுவரை 21 நாட்களில், 14 மாவட்டங்கள், 61 சட்டமன்றத் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டுள்ளேன்.
சுமார் 25 லட்சம் மக்களைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றேன். அவர்களில் பலரிடம் நேரடியாக உரையாடி அவர்களின் குறைகளை, கோரிக்கைகளை, எண்ணவோட்டங்களைக் கேட்டறியும் வாய்ப்புகள் கிடைத்தன. இந்த பயணத்தில் சுமார் 42 மணி நேரத்திற்கும் மேலாக மக்களிடம் உரையாற்றியுள்ளேன்.
இந்தப் புரட்சிப் பயணத்தில், வெற்றிகரமாக 3,200 கி.மீ. தூரம் பயணித்துள்ளேன்.
எனது எழுச்சிப் பயணத்திற்கு, செல்லும் இடமெல்லாம் மக்கள் அளித்துவரும் பேராதரவிலும், அவர்களின் அளவற்ற அன்பிலும் மிகுந்த மகிழ்ச்சியுற்றேன். மக்களின் குரலாக, அவர்களில் ஒருவராக என் மீது அன்பு பாராட்டி வரும் தமிழக மக்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்.
எனக்கு அளித்த இந்த வரவேற்புக்கு, திமுக மக்கள் விரோத ஆட்சியை அகற்றிவிட்டு, தமிழக மக்களாகிய உங்களுக்கு நல்லாட்சியை வழங்குவதே நான் தெரிவிக்கும் நன்றிக்கு நிகரானது. அதுவே எனது கடமை. அதுவே தமிழ் நாட்டு மக்களின் விருப்பமும் கூட.
எனது பயணத்தில் - பொதுமக்கள், விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர், வேலையில்லாப் பட்டதாரிகள், குடியிருப்போர் நலச் சங்கத்தினர், வியாபாரிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், சிறுகுறு தொழில் முனைவோர், மருத்துவர்கள், பாட்டாளி வர்க்கத்தினர், மாணவர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள், உப்பு உற்பத்தியாளர்கள், வழக்கறிஞர்கள், ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்போர், மாடு பிடி வீரர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் ஆகியோரைச் சந்தித்தேன். அப்போது, அவர்கள் அனைவரும் 'Failure Model ஸ்டாலின் அரசால்' தாங்கள் படும் துயரங்களையும், தங்கள் குறைகளையும், எங்களிடமிருந்து அவர்கள் எதிர்பார்க்கும் திட்டங்களையும் என்னிடம் தெரிவித்தனர்.
ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என அனைத்துப் பகுதிகளிலும் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் என அனைத்து வரியையும் தாறுமாறாக உயர்த்தி உள்ளார்கள்.
ஆனால், தற்போதைய 'Failure Model ஸ்டாலினின் திமுக ஆட்சியில்' குடிதண்ணீருக்காக சுமார் ஒரு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டிய பரிதாப நிலைதான் உள்ளது என தூத்துக்குடி மாவட்டம், வேலாயுதபுரம் கிராம மக்கள், அவர்களது வேதனையை என்னிடம் தெரிவித்தனர். இதே நிலைமைதான் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் உள்ளது.
விவசாயிகளுக்கான நலத் திட்டங்கள், மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு ஏற்படும் இடர்ப்பாடுகளை சரி செய்தல், வேலை வாய்ப்புகளை அதிகரித்தல் உள்ளிட்ட பணிகளை இந்த 'Failure Model ஸ்டாலின் அரசு' மேற்கொள்ளத் தவறியுள்ளது.
எனது தலைமையிலான கடந்த அஇஅதிமுக ஆட்சியில் இவை எல்லாம் நிறைவேற்றப்பட்டன. மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினேன்.
ஆனால் இந்த ஆட்சி, நிதி மேலாண்மை, நிர்வாகத் திறன், சட்டம் ஒழுங்கு என அனைத்துத் துறைகளிலும் கோட்டை விட்டு, தோல்வியடைந்த ஒரு அரசாகவேதான் இருக்கிறது.
போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த இந்த அரசு முற்றிலும் தவறிய காரணத்தினால், திருட்டு, கொலை, பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது.
தினந்தோறும் ஊடகங்கள், தங்க நகை விலை நிலவரம் போல விலைவாசி உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் கொலை நிலவரங்களையும், வானிலை அறிக்கை போல, பாலியல் குற்ற அவலங்களையும் வெளியிடுகின்றன.
இது பற்றியெல்லாம் சாமானிய மக்களின் குரலாக எவ்வளவுதான் கேள்வி கேட்டாலும், எதற்கும் செவி சாய்க்காமல், ஒரு பொம்மையைப் போலவே ஆட்சியை செய்து கொண்டிருக்கிறார் பொம்மை முதல்-அமைச்சர்.
விடியா ஆட்சி நடத்தும் Failure Model ஸ்டாலின் அவர்கள் இன்று வெளியிட்ட கடிதத்தில், மத்தியில் சிறப்பான ஆட்சி நடத்தும் பா.ஜ.க-விடம் அதிமுக அடிமையாக உள்ளது என குறிப்பிட்டிருக்கிறார். இதே பா.ஜ.க-விற்கு வெள்ளைக் குடை பிடித்து குழைந்து பேசி உங்கள் குடும்பத்தையும், கொள்ளை அடித்த சொத்துக்களையும் காப்பாற்ற நீங்கள் மண்டியிட்டதை தமிழக மக்கள் மட்டுமல்ல, உங்கள் கழகத் தொண்டர்களே வெறுப்புடன் பார்த்ததை மறந்துவிட்டீர்களா ஸ்டாலின்?
அஇஅதிமுக ஆட்சியில் கொண்டுவந்த நல்ல திட்டங்களைத் தொடர முடியாமல், ஆடத் தெரியாதவர்க்கு தெருக்கோணல் என்பது போல, ஆளத் தெரியாத Failure Model ஸ்டாலினுக்கு ஆட்சி முழுவதுமே கோணலாக உள்ளது. 7-ஆவது முறையாக அல்ல, இன்னமும்
70 ஆண்டுகள் ஆனாலும் இனி திமுக-விற்கு தமிழகத்தில் இடமே இல்லை. ஆகவே, வீட்டிற்குள் உட்கார்ந்து வீரவசனம் மட்டும் பேசினால் போதாது. எங்களைப் போல வீதியில் இறங்கி மக்களைச் சந்தித்துப் பாருங்கள். அப்போதாவது உங்கள் ஆட்சியின் அவல நிலை உங்களுக்குப் புரிகிறதா என்று பார்ப்போம்.
இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என செய்ய முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு, இப்போது திணறி தடுமாறுகின்றனர். ஃபோட்டோ ஷூட் விளம்பர மயக்கத்தின் மூலம் மக்களை ஏமாற்றலாம் என மனக் கணக்கு போடுகின்றனர்.
ஆட்சிக்கு வந்து 50 மாதங்களாக 'தனது குடும்ப நலனைப் பேணி காத்துவிட்டு', அம்மா அரசு செயல்படுத்திய திட்டங்களுக்கு, தனது பெயரையே சூட்டி புது திட்டங்கள் போல் அறிமுகப்படுத்துவதும்; முறையாக நிதி மேலாண்மை மேற்கொள்ளத் தெரியாமல் மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதுடன், அவர்களது கட்சிக்கான தேர்தல் விளம்பரச் செலவுகளைச் செய்து, தமிழகத்தை கடன் வாங்குவதில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்கியதுதான் இந்த 'Failure Model ஸ்டாலின் அரசின்' சாதனை.
தூத்துக்குடியில், வர்த்தக சங்கங்கள் மற்றும் சமூக நல அமைப்புகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர், மாணவர்களிடையே அதிக அளவில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்துவிட்டது என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்தார்.
இந்த அரசு அதைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது மிக மிக வேதனையான ஒன்று. நீங்கள் ஆட்சிக்கு வருவீர்கள். இந்த நாட்டுக்கு செய்ய வேண்டிய ஒரே ஒரு முக்கிய கடமை இளைய சமுதாயத்தினரை அழிக்கும் போதைப் பொருள் புழக்கத்தை முழுவதுமாக கட்டுப்படுத்த வேண்டும் என்று, என்னிடம் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதுபோல, இந்த அலங்கோல ஆட்சி மீது தமிழக மக்கள் கடும் விரக்தியும் அதிருப்தியும் மட்டுமல்ல, கோபத்துடனும் இருக்கின்றனர். இந்த மோசமான திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள் என்பது மட்டும் எனக்கு தெளிவாகத் தெரிகிறது. தமிழக மக்கள் இழந்த அமைதி, வளத்தை மீட்டுத் தருவது தான் எனது முதல் வாக்குறுதியாக, தமிழக மக்களுக்கு அளித்துள்ளேன். கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட:-
தாலிக்குத் தங்கம்.
மகளிரின் பொருளாதார மேம்பாட்டிற்காக கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம்.
மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி.
படித்த பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க மானியம்
என, இந்த அரசு காழ்ப்புணர்ச்சியுடன் முடக்கியுள்ள மக்கள் நலத் திட்டங்கள், 2026-ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தவுடன், மீண்டும் செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை மக்களுக்கு நான் அளித்துள்ளேன்.
மேலும்,
தீபாவளிக்கு சேலை.
தீப்பெட்டி தொழிலுக்கு சவாலாக உள்ள பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு தடை.
சத்துணவுத் திட்டத்தில் கடலை மிட்டாய்.
4000 அம்மா மினி கிளினிக்குகள்.
காவிரி - குண்டாறு திட்டம், தாமிரபரணி – வைப்பாறு திட்டம்.
பனை ஏறும் தொழிலாளர்களுக்கு, அவர்கள் பயன்படுத்தும் கத்தி, பதனி இறக்கும் குடுவை போன்ற பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும். அவர்களின் பாதுகாப்பு நலனைக் கருத்தில்கொண்டு காப்பீட்டுத் திட்டத்திற்குள் சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கான பிரீமியத் தொகையை அரசே செலுத்தும்.
மழைக் காலங்களில் பணியில்லாமல் இருக்கும் உப்பளத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.
மீன்பிடி தடைக் காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை, அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அதிகப்படுத்தி வழங்கப்படும்.
உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்துள்ளேன். 2026-ல் கழக ஆட்சி அமைந்தவுடன் இவையெல்லாம் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்.
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.
தன் ஆட்சியின் குறைகளை சரி செய்யாமல், விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கும் ஆட்சி, விரைவில் அகற்றப்படும். மக்கள் அகற்றுவார்கள்.
நாமும், நமது கழகத்தொண்டர்களும் மக்களுடன் உறுதியாக நின்று, வீடு வீடாகச் சென்று அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்து தலைமைக் கழகத்திடம் சமர்ப்பிக்க அறிவுறுத்துகிறேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றுமே மக்களுடன்தான் நிற்கும் என்பதை மக்களுக்கு மீண்டும் உறுதிப்படுத்துவது கழகத் தொண்டர்களின் பொறுப்பு.
2026-ம் ஆண்டு தமிழகத்தில் நமது ஆட்சி அமைந்தவுடன், 'Failure Model ஸ்டாலின் அரசால்' இந்த மக்கள் அடைந்த இன்னல்களை தீர்ப்பதுதான் நமது முக்கியமான பணி.
மக்களின் தேவைகளை ஒவ்வொன்றாகப் பார்த்து பார்த்து செய்யும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நல்லாட்சி அமையும். தமிழக மக்கள் ஏற்றம் பெறுவர், அவர்கள் வாழ்வு உயரும். அதுவரை நான் ஓயப்போவதில்லை. எனது எழுச்சிப் பயணம் தொடரும்" என்று தெரிவித்துள்ளார்.