'பாஜக ஊழல் ஆவணங்கள்' பேசிய 10 நாளில் விபத்து...! அஜித் பவார் மரணத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகள்...?
accident just 10 days after speaking about BJP corruption documents questions raised by opposition parties regarding Ajit Pawar death
மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வராக இருந்த அஜித் பவார், கடந்த ஜனவரி 28ஆம் தேதி காலை புனே அருகிலுள்ள தனது சொந்த தொகுதியான பாராமதிக்கு உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்குச் செல்லும் வழியில் பயணித்த தனியார் விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த துயரமான விபத்தில் அஜித் பவார் உட்பட அவரது பாதுகாவலர், இரண்டு விமானிகள் மற்றும் ஒரு விமானப் பணிப்பெண் என மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்தனர்.அவரது மறைவுக்குப் பிறகு, துணை முதல்வர் பதவி அவரது மனைவி சுனேத்ரா பவாருக்கு வழங்கப்பட்டது.
நடப்பு உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி, பல பகுதிகளில் சரத் பவார் தலைமையிலான அணியுடன் கூட்டணி அமைத்திருந்தது. இதனால் பிரசார மேடைகளில் பாஜக கூட்டணியை கடுமையாக விமர்சித்த அவர், உள்ளாட்சிகளில் ஊழல் நடைபெறுகிறது என திறம்பட குற்றஞ்சாட்டி வந்தார்.இந்த நிலையில் ஏற்பட்ட விமான விபத்து அரசியல் வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
விபத்து நடந்த அதே நாளிலேயே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த சம்பவத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் வெளியிட்டார்.உத்தவ் சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத், “பாஜக தொடர்பான ஊழல் ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாக ஜனவரி 15ஆம் தேதி அஜித் பவார் கூறியிருந்தார்.
அதை வெளிப்படுத்தப் போவதாகவும் தெரிவித்திருந்தார். அதற்கு பத்து நாட்களுக்குள் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது,” என்று குறிப்பிட்டு சந்தேகத்தை மேலும் அதிகரித்தார்.மேலும், அஜித் பவார் மீண்டும் சரத் பவாருடன் இணையத் திட்டமிட்டிருந்ததாகவும், அது பாஜகவுக்கு அரசியல் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் சதி நடந்திருக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், விபத்துக்குள்ளான விமானத்திற்கு தேவையான பராமரிப்பு சான்றிதழ் இல்லை என்பதும், கடைசி நேரத்தில் விமானி மாற்றப்பட்டதற்கான காரணம் தெளிவாக இல்லாததும் உள்ளிட்ட பல சந்தேகங்கள் நிலவுகின்றன என சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அமோல் மித்காரி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, காங்கிரஸ் தலைவர் விஜய் வடேட்டிவார், “அஜித் பவாரின் இறுதி சடங்குகள் கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், அவரது மனைவி உடனடியாக பதவி ஏற்றது அதிகார ஆவலை காட்டுகிறது. மகாராஷ்டிர மக்களில் பெரும்பாலானோர் இந்த மரணத்தை சாதாரண விபத்தாக நம்பவில்லை” என கூறினார்.
சரத் பவார் இதை விபத்து எனக் கூறினாலும், பல எதிர்க்கட்சிகள் இதனை பெரிய அரசியல் சதியாகவே பார்க்கின்றன. உண்மை வெளிச்சத்திற்கு வர உயர்மட்ட விசாரணை அவசியம் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
English Summary
accident just 10 days after speaking about BJP corruption documents questions raised by opposition parties regarding Ajit Pawar death