தமிழ்நாட்டில் விரைவில் அரிசிக்கு பஞ்சம் வரும்; விசில் ஊதிவிட்டு படுத்துக்கொள்ளுங்கள்! சீமான் பரபரப்பு பேச்சு - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் விரைவில் அரிசிக்கு பஞ்சம் ஏற்படும் என்றும், அப்போது விசில் ஊதிவிட்டு வாய்க்கரிசி போட்டுக்கொண்டு படுத்துக்கொள்ள வேண்டியதுதான் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சினிமா புகழை பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வந்தவர்கள் தாங்கள் அல்ல என்றும், திமுகவைவிட தவெக மிகப்பெரிய தீயசக்தி என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், மதுராந்தகத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சினிமா புகழ் வெளிச்சத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வந்தவர்கள் தாங்கள் அல்ல என்றும், வேறு கட்சியில் இருந்து பிரிந்து வந்து புதிய கட்சி தொடங்கியவர்களும் தாங்கள் இல்லை என்றும் கூறினார்.

உழைக்கும் அடித்தட்டு மக்களின் வாரிசுகளாக தாங்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட சீமான், திமுக தீயசக்தி என்றால், அதைவிட பெரிய தீயசக்தியாக தவெக இருப்பதாக விமர்சித்தார். பணம் கொடுக்காமல் வாக்குகளைப் பெற்ற கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் அரிசிக்கு பஞ்சம் ஏற்படும் என்று கூறிய சீமான், விவசாயிகளின் பயிர்க்கடன் பிரச்சினை, காவிரி நீர் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் விவசாயம் பாதிக்கப்பட்டால் அதன் விளைவாக அரிசி பற்றாக்குறை ஏற்படும் என்று கூறினார். “அப்போது விசில் எடுத்து ஊதிவிட்டு வாய்க்கரிசி போட்டுவிட்டு படுத்துக் கொள்ளுங்கள். தாகமாக இருக்கிறதா? விசில் எடுத்து ஊதுங்கள். வேறு ஒன்றும் செய்ய முடியாது” என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.

தமிழ்நாட்டிற்கு தேவையான விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டு வருவதாகவும், பால் கூட ஆந்திராவில் இருந்து வருவதாகவும் சீமான் குறிப்பிட்டார். பஞ்சாப் மாநிலத்தில் 14 மணி நேரம் மின்தடை இருப்பதாக அமைச்சர் கூறுவதாக சுட்டிக்காட்டிய அவர், அதே மாநிலத்தில் சுங்கச்சாவடி இல்லாத நிலையை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார். தான் ஆட்சிக்கு வந்தால் சுங்கச்சாவடிகளை அகற்றுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல் ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருந்தபோது தொகுதிக்கு என்ன செய்தார் என்றும் சீமான் கேள்வி எழுப்பினார். அவர் கட்சி மாறியதற்காக கூறப்படும் காரணங்களையும் விமர்சித்த சீமான், திமுக-அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டதாக கூறி கட்சி மாறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்ற கருத்தை முன்வைத்தார்.

மேலும், விஜய் திமுக மற்றும் அதிமுகவை ஊழல் சக்திகள் என்றும் தீர்ந்துபோன கட்சிகள் என்றும் விமர்சிக்கும்போது அந்த கட்சிகளுக்கு கோபம் வரவில்லையா என்றும் சீமான் கேள்வி எழுப்பினார். மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா தொடர்பாக டிக்கெட்டுகள் பணத்திற்கு விற்கப்பட்டதாகவும், முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குடும்பத்தினருக்கே கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறி, “இந்த நாட்டில் என்னென்னமோ நடக்கிறது?” என்று அவர் விமர்சித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A rice shortage will soon hit Tamil Nadu go ahead and blow the whistle then just lie back and relax Seeman sensational remarks


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->