விஜய்க்கு பிறந்தநாள் பரிசா? இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா?
A birthday gift for Vijay A bold move by the two Vijayabhaskars Can Edappadi head withstand so many blows
சென்னை: தமிழக அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ஆம் தேதி, அதிமுக முன்னாள் அமைச்சர்களும் தற்போதைய எம்.எல்.ஏ.க்களுமான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே பெருந்துறை ஜெயக்குமார், மரகதம் குமரவேல் உள்ளிட்ட சில அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் செல்வாக்கு கொண்ட இந்த இரு முன்னாள் அமைச்சர்களின் சாத்தியமான நகர்வு அதிமுக வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவுக்குள் கட்சித் தலைமையின் செயல்பாடுகள், அதிகாரப் பகிர்வு மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கான முக்கியத்துவம் குறித்த அதிருப்தி அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கட்சியின் முடிவுகள் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தினரால் மட்டுமே எடுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் சில நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்ட பதிவு கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், "எம்ஜிஆர், அம்மா காட்டிய வழியில் மக்கள் சேவையே என் என்றும் மாறாத லட்சியம். விராலிமலை தொகுதி மக்களின் நம்பிக்கையையும், என் மீது அன்பு கொண்ட தொண்டர்களின் விருப்பத்தையும் மதித்து என் அடுத்தகட்ட அரசியல் பயணம் அமையும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது. குறிப்பாக, அவரது அடுத்தகட்ட அரசியல் முடிவு தவெகவுடன் தொடர்புடையதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனினும், சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவெகவில் இணையவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அதிமுக மற்றும் தவெக தலைமைகளும் இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இருப்பினும், ஜூன் 22-ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் ரீதியாக ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த தகவல்கள் உண்மையா அல்லது அரசியல் ஊகங்களா என்பது வரும் நாட்களில் தெளிவாகும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
English Summary
A birthday gift for Vijay A bold move by the two Vijayabhaskars Can Edappadi head withstand so many blows