2026 சட்டசபை தேர்தல்: தவெக வலுவாக இருக்கும் மாவட்டங்கள்! மொத்தமாக அள்ளும் விஜய்? சர்வே தகவல்
2026 Assembly Elections Districts where Tvk is strong Will Vijay sweep the polls Survey information
சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வலுவாக இருக்கும் மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளும் திமுக ஒரு தனியார் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து நடத்தியதாக கூறப்படும் அதிகாரபூர்வமற்ற கருத்துக் கணிப்பில், தவெக குறித்த சில முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
அந்த சர்வேயின்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்காளர் ஆதரவில் நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பதாக கூறப்படுகிறது. நகரங்கள் மற்றும் மாநகரங்களில் தவெகுக்கு குறிப்பிடத்தக்க ஆதரவு காணப்படுவதாகவும், மாநகராட்சி மற்றும் நகர்ப்புற மையங்களில் சுமார் 10 முதல் 15 சதவீதம் வரை வாக்காளர் ஆதரவு இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக நகர்ப்புற இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் தவெக செயல்பாடுகள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு மாறாக, கிராமங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தவெக ஆதரவு 10 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாக அந்த சர்வே கூறுகிறது. தமிழ்நாட்டில் பெரும்பான்மையான வாக்காளர்கள் இன்னும் நகரங்களுக்கு வெளியே வசிப்பதால், கிராமப்புறங்களில் குறைந்த ஆதரவு தவெகுக்கு பெரிய சவாலாக இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சட்டமன்றத் தேர்தல்களில் கிராமப்புற மற்றும் புறநகர் வாக்காளர்களே முடிவை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதால், இந்த நிலைமை தவெக எப்படி சமாளிக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதற்கிடையே, திமுக think tank சர்வேக்கு இணையாக, தவெக உட்கட்சி சர்வே ஒன்றும் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த உட்கட்சி ஆய்வின்படி, 2026 சட்டசபை தேர்தலில் தவெக வலுவாக இருக்கும் மாவட்டங்களாக சென்னை, செங்கல்பட்டு, தருமபுரி, மதுரை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தென்காசி, திருப்பத்தூர், திருவாரூர், தூத்துக்குடி, திருப்பூர், திருவள்ளூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த உட்கட்சி சர்வே குறித்து ‘இந்தியா டுடே’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், மொத்தம் 41,453 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆய்வின் அடிப்படையில், திமுக 32.9 சதவீத ஆதரவுடன் முன்னணியில் இருப்பதாகவும், அதற்கு அடுத்ததாக தவெக 31.7 சதவீத ஆதரவையும், அதிமுக 27.3 சதவீத ஆதரவையும் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 8.1 சதவீதம் பேர் பிற கட்சிகளை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த உட்கட்சி மதிப்பீட்டின்படி, திமுக 104 சட்டசபை இடங்களை கைப்பற்றி முன்னிலை வகிக்கும் என்றும், தவெக 74 இடங்களையும், அதிமுக 56 இடங்களையும் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தவெக அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும் பல தொகுதிகளில் வெற்றி பெற்று, சட்டசபையில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுக்கும் வாய்ப்பு இருப்பதாக அந்த சர்வே கூறுகிறது.
English Summary
2026 Assembly Elections Districts where Tvk is strong Will Vijay sweep the polls Survey information