77-ல் இருந்து 110 மாவட்டங்கள்: தி.மு.க.வின் அடுத்தகட்ட அதிரடி... முப்பெரும் விழாவில் புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம்...!
110 districts from 77 DMK next move New in charges introduced grand ceremony
சட்டசபை தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 110 மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து, அவர்கள் அனைவரையும் வருகிற செப்டம்பர் 17-ந் தேதி நடைபெற உள்ள தி.மு.க. முப்பெரும் விழாவில் அறிமுகம் செய்து வைக்க கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க. சந்தித்த தோல்விக்கான காரணங்களை ஆராய கட்சியின் சார்பில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.

இதுவரை 77 மாவட்டங்களாக செயல்பட்டு வந்த தி.மு.க. அமைப்பு, தற்போது 110 மாவட்டங்களாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 110 மாவட்டங்கள் எவை, அவற்றின் கீழ் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகள் எவை என்பது தொடர்பான விவரங்களும் நேற்று வெளியிடப்பட்டன.
புதிதாக பிரிக்கப்பட்ட 110 மாவட்டங்களுக்கான கட்சி அமைப்புகளை உருவாக்கும் பணிகள் அடுத்தகட்டமாக தொடங்கியுள்ளன. தற்போதுள்ள 77 மாவட்ட செயலாளர்களும் தங்கள் தலைமையில் மாவட்ட செயற்குழு கூட்டத்தை நடத்தி, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் எந்தெந்த ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் பேரூராட்சிகள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து பரிந்துரைகளை தயாரிக்க வேண்டும்.
இந்த பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் கட்சித் தலைமையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.தி.மு.க.வில் மாவட்ட செயலாளர்கள் பொதுவாக கட்சி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதற்கு முன்பாக, குறிப்பிட்ட மாவட்டத்தின் கட்சி பணிகளை ஒருங்கிணைத்து நடத்துவதற்காக பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
புதிய மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் வரை, நியமிக்கப்படும் பொறுப்பாளர்களே கட்சி நிர்வாகப் பணிகளை கவனிப்பார்கள்.இந்த நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 110 மாவட்டங்களுக்கும் விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். புதிதாக நியமிக்கப்படும் அனைவரையும் ஒரே நிகழ்ச்சியில் அறிமுகம் செய்து வைக்க தி.மு.க. தலைமை திட்டமிட்டுள்ளது.
அதன்படி, செப்டம்பர் 17-ந் தேதி நடைபெற உள்ள தி.மு.க. முப்பெரும் விழாவில் 110 மாவட்ட பொறுப்பாளர்களையும் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.முப்பெரும் விழா நடைபெறும் இடம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
110 districts from 77 DMK next move New in charges introduced grand ceremony