தமிழகத்தில் தீவிரமடையும் SIR பணிகள்; திருப்பூர் மாவட்டத்தில் 05 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்..?
05 lakh voters removed from the list in Tiruppur district
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர பணிகள் கடந்த ஒருமாதமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 24 லட்சத்து 44 ஆயிரத்து 929 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். அவர்களுக்கான வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வழங்கியுள்ளனர்.
அத்துடன், குறித்த கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து திரும்பப்பெற்றும் வருகின்றனர். இந்த படிவங்களை ஒப்படைப்பதற்கான காலக்கெடு இரண்டு முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உடன் நிறைவடைந்தது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் வெளிமாநில, வெளிமாவட்ட தொழிலாளர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இங்கேயே வாக்காளர் பட்டியலிலும் பதிவு செய்து வைத்திருந்தனர்.

அத்தகைய வாக்காளர்களில் பலரும் தற்போது இடம்பெயர்ந்து தங்களில்சொந்தமாநிலம், மாவட்டங்களுக்கு சென்று விட்டனர். இதனால் அவர்களில் பலரை கண்டறிந்து படிவங்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், இரட்டை வாக்காளர்களாகவும் பலர் உள்ளனர்.
இந்த திருத்தப்பணியின் போது அவர்களது பெயர் நீக்கப்படும் நிலை உள்ளது. அதன்படி, சுமார் 5 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்று தெரிய வருகிறது. தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில்தான் அதிக வாக்காளர்கள் பெயர் நீக்கப்படும் சூழ்நிலை இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும், 19-ந்தேதி வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்போது தான் எவ்வளவு வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது குறித்து தெரியவரும். இதுதொடர்பாக திருப்பூர் ஆட்சியர் மனிஷ் நாராணவரே கூறுகையில்; '' வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. வருகிற 19-ந்தேதி இதுகுறித்த முழுவிவரங்களும் தெரியவரும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
05 lakh voters removed from the list in Tiruppur district