திடீர் மாரடைப்பு.. இந்திய இளைஞர்களிடையே வெடித்துள்ள முக்கிய பிரச்சனை! மாரடைப்புக்கான உண்மை காரணங்கள் என்ன? ஆய்வு விளக்கம்
Sudden heart attack A major problem that has erupted among Indian youth What are the real causes of heart attack Study explains
உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் போது, பேட்மிண்டன் விளையாடும் நேரத்தில், அல்லது சாதாரணமாக நடந்து கொண்டிருக்கும்போது கூட எதிர்பாராத விதமாக திடீரென மயங்கி விழுந்து இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்த திடீர் மரணங்களுக்கு பின்னால் இருக்கும் காரணங்கள் குறித்து தற்போது முக்கிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள கட்டுரையில், எய்ம்ஸ் (AIIMS) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) இணைந்து நடத்திய ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட திடீர் மரணங்களில் 42.6% மரணங்கள் இதய பிரச்சனைகளால் ஏற்பட்டவை என கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தும் விஷயம், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 30 வயதுகளின் தொடக்கத்தில் இருந்த இளைஞர்கள் என்பதே.
பிரேதப் பரிசோதனைகளில், திடீர் மாரடைப்புக்கு முக்கிய காரணமாக தமனி நோய் (Coronary Artery Disease) கண்டறியப்பட்டுள்ளது. இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் தமனிகள் மிகவும் குறுகிய நிலையில் இருந்ததே, திடீர் மாரடைப்புக்குக் காரணமாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் மேலும் கவலை அளிக்கும் விஷயம் என்னவென்றால், 21.3% மரணங்களில் பிரேதப் பரிசோதனையிலும் எந்தத் தெளிவான காரணமும் கண்டறிய முடியவில்லை. இத்தகைய மரணங்கள் பெரும்பாலும் இதயத்தின் மின்சார செயல்பாட்டில் ஏற்படும் சீரற்ற மாற்றங்களால் (Arrhythmia) நிகழ்ந்திருக்கலாம் என மருத்துவர்கள் கருதுகின்றனர். அதேபோல், இன்னொரு 21.3% மரணங்கள் நிமோனியா, காசநோய் போன்ற சுவாச நோய்களால் ஏற்பட்டுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் திடீர் மாரடைப்பு அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியர்களுக்கு மரபணு ரீதியாகவே இதய நோய்கள் ஏற்படும் அபாயம் 3 முதல் 4 மடங்கு அதிகம் என ஆய்வு கூறுகிறது. உயிரிழந்தவர்களில் பலருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருந்ததாகவும், ஆனால் அவர்களுக்கு அது முன்கூட்டியே தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாரடைப்புக்கு முன்பாக ஏற்படும் அஜீரணம், நெஞ்சு எரிச்சல், சோர்வு, அசிடிட்டி போன்ற அறிகுறிகளை இளைஞர்கள் சாதாரண பிரச்சனைகளாக நினைத்து அலட்சியப்படுத்தியுள்ளனர். இதயப் பிரச்சனைக்கு தீர்வாக மருத்துவரை அணுகுவதற்கு பதிலாக, திடீரென ஜிம்முக்குச் சென்று கடுமையான உடற்பயிற்சிகளை தொடங்கியுள்ளனர். இதனால் இதய துடிப்பில் சீரற்ற மாற்றம் ஏற்பட்டு, உயிரிழப்பு நிகழ்ந்ததாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட இளைஞர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் புகைபிடிப்பவர்களாகவோ அல்லது மது அருந்துபவர்களாகவோ இருந்துள்ளனர். மேலும், இந்தியாவில் வேலைக்கு செல்லும் மக்களில் சுமார் 75% பேர் அதிக மன அழுத்தத்தில் இருப்பதும், அது இதயத்தை மெதுவாக பாதிப்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 30 வயதை கடந்த அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறை இதய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். காரணம் தெரியாத அதிக சோர்வு, மூச்சுத் திணறல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும், கடுமையான உடற்பயிற்சிகளை தொடங்குவதற்கு முன் இதயம் அதை தாங்கும் திறன் கொண்டதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றொரு முக்கிய தகவல் என்னவென்றால், திடீர் மாரடைப்புக்கும் கோவிட் தடுப்பூசிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Sudden heart attack A major problem that has erupted among Indian youth What are the real causes of heart attack Study explains