Freedom Fighters : தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்... யார் இவர்.?!
Namakkal kavingar history
நாமக்கல் கவிஞர்:
இவர் முத்தமிழிலும், ஓவியக்கலையிலும் வல்லவர். சிறந்த விடுதலை போராட்ட வீரர். தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர். நாமக்கல் கவிஞர் என அழைக்கப்படும் வெ.இராமலிங்கம் பிள்ளையை பற்றிய சிறிய தொகுப்பு...!!
பிறப்பு :
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை 1888ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி, நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வெங்கட்ராமன், அம்மணியம்மாள் தம்பதியருக்கு எட்டாவது குழந்தையாக பிறந்தார்.
கல்வி :
இராமலிங்கனார் தொடக்கக்கல்வியை பழனி ஆசிரியரிடம் கற்றார். பின்னர் நாமக்கல் நம்மாழ்வார் பள்ளியில் சேர்ந்தார். நாமக்கல் கவிஞர், தனது பத்தொன்பது வயதில் மெட்ரிக்குலேஷன் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர் திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். ஓவியக்கலையில் நாட்டம் கொண்ட நாமக்கல் கவிஞர் தனது திறமையை வளர்த்துக்கொண்டார்.
திருமண வாழ்க்கை :
இராமலிங்கம் பிள்ளையின் முதல் மனைவி முத்தம்மாள் 1924ஆம் ஆண்டு காலமானார். அதனை தொடர்ந்து, குடும்பத்தாரின் வற்புறுத்தலால் முத்தம்மாளின் தங்கையை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தனர்.
விடுதலை போராட்டத்தில் வெ.இராமலிங்கம் பிள்ளையின் பங்கு :
தந்தையாரின் சிபாரிசு பெயரில் நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்தார். அவர் ஓவியம் வரைவதில் நாட்டமுடையவராக விளங்கிய காரணத்தால் அங்கு பணியாற்ற முடியாமல் வெளியேறினார்.
இராமலிங்கம் பிள்ளை சுயமாக ஓவியத்தொழிலை தொடங்கினார்;. ஓவியத்தொழிலில் நல்ல வருமானம் வர தொடங்கியது. இருந்தாலும் இந்திய விடுதலைக்கான அரசியலை நோக்கியே பயணித்தார். இராமலிங்கம் பிள்ளைக்கு பாரதியாரின் அறிமுகம் கிடைத்தது. அதன்பின் தொடர்ந்து விடுதலை உணர்வை கிளர்ந்து எழ செய்யும் பாடல்களை படைத்தார்.
திலகருக்குப்பின் காந்தியின் சகாப்தம் உருவானபோது பாரதியார் உயிரோடு இல்லை. அவர் இல்லாத வெற்றிடத்தை இராமலிங்கம் பிள்ளை நிரப்பிவிட்டதாக பலரும் பேச தொடங்கினார்கள். அதற்கு முன்னோட்ட நிகழ்வாக காந்தி தொடங்கிய உப்பு சத்தியாக்கிரக போராட்ட நிகழ்வு அமைந்தது.
சத்தியாக்கிரக ஊர்வலத்தில் இராமலிங்கம் பிள்ளை பாடிய 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது' பாடலை ஒரு வார பத்திரிக்கை லட்சக்கணக்கில் அச்சிட்டு தமிழ்நாடெங்கும் பரப்பினர். காந்திய திட்டங்களான தீண்டாமை விலக்கு, மதுவிலக்கு, கதர் அபிவிருத்தி, கைத்தொழில் வளர்ச்சி, தாய்மொழி கற்றல் ஆகியவை பற்றி அவர் எழுதிய பாடல்கள் மேடைதோறும் ஒலிக்க தொடங்கின.
இராமலிங்கம் பிள்ளை, எளிய சொற்களால் கவிதை பாடி, தேசிய, காந்திய கொள்கைகளை பரப்பினார். தேசபக்தி பாடல்கள் பாடியும், ஆவேச உரைகள் நிகழ்த்தியும் இளைஞர்கள் மனதில் எழுச்சியை ஏற்படுத்தினார். ஏராளமான கவிதைகள் எழுதி குவித்தார். 'தேசியக் கவி' என்று போற்றப்பட்டார்.
வெ.இராமலிங்கம் பிள்ளையின் மறைவு :
தேசியக் கவிஞர், காந்தியக் கவிஞர், காங்கிரஸ் புலவர், அரசவைக் கவிஞர் என்றெல்லாம் போற்றப்பட்ட நாமக்கல் கவிஞர் 1972ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 24ஆம் தேதி, தனது 84வது வயதில் தான் பற்றுக் கொண்டிருந்த தமிழையும், தமிழர்களையும், தமிழகத்தையும் மீளாத் துன்பத்தில் ஆழ்த்திவிட்டு மறைந்தார்.
English Summary
Namakkal kavingar history