இந்தியாவை சீண்டும் வங்கதேசம்: பாகிஸ்தான் தளபதியிடம் சர்ச்சைக்குரிய வரைபடைத்த கொடுத்து சர்ச்சை ஏற்படுத்தியுள்ள யூனுாஸ்..!
Yunus creates controversy by giving controversial map to Pakistani general
இந்திய மாநிலங்களை உள்ளடக்கிய வங்கதேசத்தின் சர்ச்சைக்குரிய வரைபடத்தை, அந்நாட்டின் இடைக்கால தலைவர் முகமது யூனுஸ், பாகிஸ்தான் தளபதியிடம் கொடுத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமராக ஷேக் ஹசீனா இருந்த போது இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவு இருந்தது. இதனால் பாகிஸ்தான் வங்கதேசத்திடம் இருந்து விலகி இருந்தது. இருநாடுகளுக்கும் இடையில் எந்தவித இருதரப்பு பயணமும் நடைபெறவில்லை. ஆனால், கடந்த 2024-இல் நடந்த மாணவர் போராட்டத்தால் ஷேக் ஹசீனா பதவியை இழந்து, அந்நாட்டில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
இதையடுத்து வங்கதேச அரசின் இடைக்கால ஆலோசகராக முகமது யூனுஸ் பதவியேற்றார். அவரது அரசில் இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. முக்கியமாக அந்நாட்டில் சிறுபான்மை ஹிந்துக்களுக்கு எதிராக தக்குதல்கள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தானுடனான வங்கதேசத்தின் உறவும் வலுவடைந்து வருகிறது. பாகிஸ்தான் தலைவர்கள் வங்கதேசத்திற்கு செல்வதும், வங்கதேச தலைவர்கள் பாகிஸ்தான் செல்வதும் அடிக்கடி நடந்து வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த தளபதி ஷாஹிர் ஷம்சாத் மிர்சா வங்கதேசம் சென்றுள்ளார். டாக்காவில் வைத்து முகமது யூனுஸை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். குறித்த சந்திப்பின் போது, புத்தகம் ஒன்றை அவருக்கு பரிசாக அளித்தார். ஆனால், அந்த புத்தகத்தின் முகப்பில் உள்ள வரைபடம் தற்போது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
ஏனெனில், அந்த வரைபடத்தில் வங்கதேச நாட்டுடன், இந்தியாவுக்கு சொந்தமான வடகிழக்கு மாநிலங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த புகைப்படத்தை முகமது யூனுஸ் தனது சமூக வலைதள பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து இந்திய நெட்டிசன்கள் முகமது யூனுசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
English Summary
Yunus creates controversy by giving controversial map to Pakistani general