வயநாட்டில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சரக்கு லாரி: தமிழ்நாட்டை சேர்ந்த ஓட்டுநர் பரிதாபமாக பலி..!
Truck driver from Tamil Nadu dies after falling into 100foot gorge in Wayanad
கேரள மாநிலம் வயநாட்டில் 100 அடி பள்ளத்தாக்கில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் திருச்செங்கோட்டை சேர்ந்த ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மற்றுமொரு ஓட்டுநர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இருந்து கேரள மாநிலம் கண்ணூருக்கு ஸ்டீல் கம்பிகளுடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சரக்கு லாரி சென்றுள்ளது.
இந்த லாரியை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு புதுப்பாளையத்தைச் சேர்ந்த செந்தில் குமார் (49) என்பவர் ஓட்டிச் சென்றார். செந்தில் என்ற இன்னொரு ஓட்டுனரும் இந்த லாரியில் இருந்துள்ளார்.
நேற்று நள்ளிரவு சுமார் 11.30 மணியளவில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி மலைப்பகுதியில் லாரி சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக லாரி கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து அறிந்ததும் மானந்தவாடி தீயணைப்பு வீரர்கள், போலீசார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு நேரம், மலைப்பகுதி என்பதால் தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் பெரும் சிரமப்பட்டு மீட்புப் பணியை மேற்கொண்டுள்ளனர்.
ஆனாலும் லாரியை ஓடிவந்த செந்தில் குமாரை காப்பாற்ற முடியவில்லை. அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மானந்தவாடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் இன்னொரு ஓட்டுநரான செந்தில் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார் குறித்த . விபத்து குறித்து கேரளா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Truck driver from Tamil Nadu dies after falling into 100foot gorge in Wayanad