விஜய்யின் கர்நாடக பயணம் திடீர் ஒத்திவைப்பு ஏன்....? - பின்னணி தகவலை உடைத்த டி.கே. சிவக்குமார்...!
Why Vijay Karnataka visit suddenly postponed DK Sivakumar broke background information
கர்நாடக முதல்-மந்திரியும், மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே. சிவக்குமார், தமிழக முதலமைச்சர் விஜயின் கர்நாடக பயணம் ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். மேலும், விஜயின் துணிச்சலையும் அரசியல் முதிர்ச்சியையும் பாராட்டி அவர் தெரிவித்த கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.
இதுகுறித்து டி.கே. சிவக்குமார் தெரிவித்ததாவது,"தமிழக முதலமைச்சர் விஜய் பெங்களூருக்கு வருவதற்கான முடிவை எடுத்திருந்தார். அவரது துணிச்சலான அந்த முடிவை நான் மனப்பூர்வமாக பாராட்டினேன். இருப்பினும், தற்போதைய சூழல் சுமுகமாக இல்லாததால், அமைதியான மற்றும் நல்லிணக்கமான நேரத்தில் சந்திப்பதே அனைவருக்கும் சிறந்ததாக இருக்கும் என்று அவரிடம் கேட்டுக்கொண்டேன்.

எனது வேண்டுகோளை மதித்து, தனது பயணத்தை விஜய் ஒத்திவைத்தார். அவருடைய இந்த அணுகுமுறை, அரசியல் நாகரிகத்தையும் பரஸ்பர மரியாதையையும் வெளிப்படுத்துவதாக நான் கருதுகிறேன்.விஜய் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அரசியலில் புதியவராக இருந்தாலும், துணிச்சலுடனும் தெளிவான அணுகுமுறையுடனும் செயல்படும் தலைவராக அவர் திகழ்கிறார்.
அவர் எடுத்த இந்த முதிர்ச்சியான முடிவுக்காக அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்தேன்.அரசியல் கருத்து வேறுபாடுகள் இருப்பது ஜனநாயகத்தின் இயல்பு.
ஆனால், அந்த வேறுபாடுகள் மனிதநேயத்தையும் பரஸ்பர மரியாதையையும் பாதிக்கக் கூடாது. நாம் அனைவரும் நல்லிணக்கமான சூழலில் சந்தித்து உரையாட வேண்டும் என்பதே எனது விருப்பம்.
எனது நண்பர்களுக்கு எதிராக யாரும் முழக்கங்கள் எழுப்புவதையோ, தேவையற்ற பதற்றம் உருவாகுவதையோ நான் விரும்பவில்லை. கர்நாடகமும் தமிழ்நாடும் நல்லுறவுடன் இணைந்து செயல்பட வேண்டும். பரஸ்பர மரியாதையுடனும் ஒற்றுமையுடனும் முன்னேறினால்தான் இரு மாநில மக்களின் நலனும் பாதுகாக்கப்படும்" என டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
English Summary
Why Vijay Karnataka visit suddenly postponed DK Sivakumar broke background information