குழந்தைகள் என்ன பாவம் செய்தது?கணவரோ, மனைவியோ சுதந்திரமாக உங்க விருப்படி இருக்க விரும்பினால் திருமணமே செய்திருக்கக்கூடாது- சுப்ரீம் கோர்ட்
What sin did the children commit If a husband or wife wanted to be free to do as they please they should not have gotten married at all Supreme Court
நியூடெல்லி: சிங்கப்பூரில் வசிக்கும் ஒருவருக்கும், ஐதராபாத்தில் 2 குழந்தைகளுடன் வசிக்கும் மனைவிக்கும் இடையே விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இளைய மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக குழந்தைகளை தந்தையிடம் ஒப்படைக்க உத்தரவிடுமாறு கணவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது.
வழக்கின் பின்னணி
சிங்கப்பூரில் வசிக்கும் ஒருவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அவரின் மனைவி, அவரை பிரிந்து, தற்போது ஐதராபாத்தில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில், இளைய மகனின் பிறந்தநாள் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வருவதால், அதை குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டாட இந்தியா வந்துள்ளார் அந்த தந்தை. இதற்காக அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
நீதிமன்ற விசாரணை
இந்த மனு, நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆர். மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. அப்போது, மனைவி காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
நீதிபதிகள் இருவருக்கும் பேசித் தீர்வு காணுமாறு அறிவுறுத்தினர். அதற்கு மனைவி, “என் கணவர் பிரச்சனையை சரி செய்ய விரும்பவில்லை. எனக்கு ஜீவனாம்சம் கூட தரவில்லை” என்று கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள், “நீங்கள் குழந்தைகளுடன் சிங்கப்பூரில் கணவருடன் வாழ்வதில் என்ன பிரச்சனை?” என்று கேட்டனர். அதற்கு அவர், “கணவரின் நடத்தையை பார்த்தால் அவருடன் வாழ்வது கடினம். எனக்கு வாழ்வாதாரத்துக்காக வேலை தேவை” என்று பதிலளித்தார்.
நீதிபதிகளின் அறிவுரை
இதற்கு நீதிபதிகள், “வேலை கிடைக்கிறதோ இல்லையோ, நீங்கள் சிங்கப்பூரில் சென்றால் உங்களை கணவர் பராமரிக்க வேண்டும். தேவைப்பட்டால், உங்களுக்கும் குழந்தைகளுக்கும் பணம் டெபாசிட் செய்யுமாறு கணவரை உத்தரவிடலாம்” என்றனர்.
அப்போது மனைவி, “நான் யாரையும் சார்ந்திருக்க விரும்பவில்லை” என்றார்.
இதற்கு நீதிபதிகள் அறிவுரை கூறியதாவது:
“எங்களை பழைய ஆள் என்று நினைத்தாலும் பரவாயில்லை. திருமண உறவு நீடிக்கும்போது, கணவரோ மனைவியோ தனியாக இருப்பது சாத்தியமில்லை. யாராவது சுதந்திரமாக இருக்க விரும்பினால் அவர்கள் திருமணமே செய்யக் கூடாது. திருமணம் என்பது இரண்டு ஆன்மாக்கள் ஒன்று சேர்வது. பிறகு எப்படி சுதந்திரமாக இருப்பது?
நீங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்தால், நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். சிறிய வயதிலேயே குழந்தைகள் உடைந்த குடும்பத்தைப் பார்க்க வேண்டுமா? அவர்கள் என்ன தவறு செய்தனர்?” என்று கேட்டனர்.
உச்சநீதிமன்ற உத்தரவு
இதற்கு மனைவி சிந்திப்பதாக கூறினார். பின்னர், குழந்தைகள் தந்தையுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மனைவி மற்றும் குழந்தைகளின் செலவுக்காக ரூ.5 லட்சம் டெபாசிட் செலுத்துமாறு கணவரை உத்தரவிட்டனர்.
English Summary
What sin did the children commit If a husband or wife wanted to be free to do as they please they should not have gotten married at all Supreme Court