திருமண நிகழ்ச்சிகளில் பெண்கள் தங்க நகைகள் அணிய கட்டுப்பாடு! எங்கு? ஏன்?!
Uttarakhand marriage function jewels
உத்தராகண்ட் மாநிலம் ஜான்சர்-பவார் பகுதியில் உள்ள கந்தார் கிராமம் பழங்குடியின மக்கள் வசிக்கும் சிறிய கிராமமாகும். சமீபத்தில் அங்கு நடைபெற்ற பழங்குடியினர் தலைவர்கள் கூட்டத்தில், திருமண மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளில் பெண்கள் தங்க நகைகள் அணிவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அந்த முடிவின்படி, திருமணமான பெண்கள் இந்நிகழ்ச்சிகளில் தாலி, மூக்குத்தி மற்றும் கம்மல் மட்டுமே அணியலாம். சங்கிலி, ஆரம், நெக்லஸ் போன்ற ஆடம்பர நகைகள் அணிவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதை மீறுவோருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த தீர்மானம் குறித்து கிராமத் தலைவர்கள் தெரிவித்ததாவது: “திருமண விழாக்களில் பங்கேற்பதற்காக ஏழை குடும்பங்கள் கடன் வாங்கி அதிக செலவுகளைச் செய்கின்றன. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், பலர் தங்கள் பொருளாதாரத்தை மீறி தங்க நகைகள் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் கடன் சுமையில் சிக்குகின்றனர். இந்த ஆடம்பரச் செலவுகளை கட்டுப்படுத்தி சமூகத்தில் சமத்துவத்தை உருவாக்கும் நோக்கில் இக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது,” என்றனர்.
மேலும் அவர்கள் கூறியதாவது: “திருமணம் என்பது புனிதமான நிகழ்ச்சி. அது செல்வம் காட்டும் மேடையாக மாறக்கூடாது. பணக்காரரும் ஏழையும் ஒரே சமூகத்தில் சமமாக வாழ வேண்டும் என்ற உணர்வை வளர்க்க இத்தகைய கட்டுப்பாடுகள் அவசியம். அனைவரும் இதனை மதித்து பின்பற்றினால், சமூகத்தில் சமத்துவமும் ஒற்றுமையும் நிலைக்கும்,” எனவும் தெரிவித்தனர்.
இந்த முடிவு கிராமத்தில் பெரும் விவாதத்துக்குரியதாக இருந்தாலும், பலர் இதனை பாராட்டி “இது சமூக மாற்றத்திற்கான ஒரு நல்ல தொடக்கம்” எனக் கூறி வருகிறார்கள்.
English Summary
Uttarakhand marriage function jewels