வெளிநாட்டு வாகனங்களுக்கு 25% இறக்குமதி வரி விதித்துள்ள அமெரிக்கா: பாதிக்கப்படும் இந்திய வாகன ஏற்றுமதி..? வல்லுநர்கள் சொல்வது என்ன..? - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றத்தில் இருந்து அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். தற்போது மற்றும்மொரு வரிவிதிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது, அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியைப் பாதுகாக்கும் நோக்கில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கனரக வாகனங்களுக்கு 25% வரி விதிப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் இந்திய வாகன ஏற்றுமதிக்கு நேரடியாக பாதிப்பு ஏற்படாது என்றும், உதிரிபாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

அதன்படி, அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் நடுத்தர மற்றும் கனரக லாரிகள் மீது 25% வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இந்த புதிய வரிவிதிப்பு வரும் நவம்பர் 01ந் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. ஏற்கனவே மருந்துப் பொருட்கள், எஃகு, அலுமினியம் போன்ற பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் அடுத்தகட்டமாக கனரக வாகனங்கள் மீதும் தற்போது வரி விதிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள செய்து குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:  'நவம்பர் 01ந் தேதி முதல், அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்து நடுத்தர மற்றும் கனரக வாகனங்களுக்கும் 25% வரி விதிக்கப்படும். இந்த வரிவிதிப்பு, டெலிவரி டிரக்குகள், செமி டிரக்குகள், பள்ளி மற்றும் பொதுப் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவித்துள்ளார்.

அதாவது, நாட்டின் தேசியப் பாதுகாப்பைக் காரணம் காட்டி, அமெரிக்க வர்த்தகத் துறை கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வரிவிதிப்பால் வர்த்தக வாகனங்களின் விலை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்காவுக்கு அதிக அளவில் லாரிகளை ஏற்றுமதி செய்யும் மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய வரி விதிப்பால், அமெரிக்கா-மெக்சிகோ-கனடா இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்த நடவடிக்கையால் இந்தியாவின் கனரக வாகன ஏற்றுமதிக்கு நேரடி பாதிப்புகள் ஏதும் இல்லைஎன்று கூறப்படுகிறது.  ஏனெனில், இந்தியா தரப்பில் அமெரிக்கச் சந்தைக்கு இதுபோன்ற லாரிகளை ஏற்றுமதி செய்வதில்லை. இந்தியா தனது கனரக வாகனங்களை ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுக்கே பெரும்பாலும் ஏற்றுமதி செய்கிறது.

குறிப்பாக டாடா மோட்டார்ஸ், அசோக் லேலண்ட் போன்ற முக்கிய இந்திய நிறுவனங்களின் வர்த்தகத்தில் உடனடி பாதிப்புகள் எதுவும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. ஆனால், குறித்த வரிவிதிப்பால் சில மறைமுகப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக, கனரக வாகனங்களில் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள் ஏற்றுமதியில் தாக்கம் இருக்கலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

இந்தியா ஆண்டுக்கு சுமார் 06 முதல் 07 பில்லியன் டாலர் மதிப்புள்ள வாகன உதிரிபாகங்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது. இதனால், பாரத் ஃபோர்ஜ் போன்ற வர்த்தக வாகனங்களுக்கான உதிரிபாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்படலாம் என் எச்சரிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவில் வாகனங்களுக்கான தேவை குறைந்தால், இந்திய நிறுவனங்களின் லாபம் 15 முதல் 20 சதவீதம் வரை குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழல் இந்தியாவிற்குப் புதிய வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளதாகவும் பார்க்கப்படுகிறது. எவ்வாறு எனில், மாற்றுச் சந்தைகளை நோக்கி ஏற்றுமதியை விரிவுபடுத்துவதற்கும், அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மூலம் வரிவிலக்கு பெறுவதற்கும் வழிவகுக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனால், மின்சார வாகனங்கள் மற்றும் அதிக தொழிலாளர்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உதிரிபாகங்கள் உற்பத்தியில் இந்தியாவுக்கு சாதகமான வாய்ப்புகள் ஏற்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

US imposes 25 percentage import duty on foreign vehicles


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...


செய்திகள்



Seithipunal
--> -->