பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் ட்ரோன்களை வீசி தாக்குதல்: முக்கிய தளபதி உயிரிழப்பு, 19 பேர் காயம் என உல்பா அமைப்பு கதறல்..!
ULFA organization reports that the Indian Army launched drones to attack ULFA terrorist camps
உல்பா (ulfa-i) பயங்கரவாத அமைப்பு முகாம் மீது இந்திய ராணுவம் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், அப்படி தாக்குதல் நடந்ததாக தகவல் ஏதும் இல்லையென இந்திய ராணுவம் கூறியுள்ளது.
இது தொடர்பாக அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள ராணுவ அதிகாரி ஒருவர், ட்ரோன் வீசி தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவத்திடம் எந்த தகவலும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். அதேபோன்று நாகாலாந்தில் உள்ள ராணுவ அதிகாரியும் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமை பிரித்து தனி நாடு கேட்டு பாரேஷ் பருவா தலைமையிலான உல்பா பயங்கரவாத அமைப்பினர் போராடி வருகின்றனர். அந்த அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த அமைப்பினர், தற்போது மியான்மர் எல்லைப் பகுதிகளில் பதுங்கியுள்ளனர்.
இந்நிலையில் உல்பா அமைப்பினர் அறிக்கை வெளியிட்டு கூறியுள்ளதாவது: மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள நாகலாந்தின் லோங்வா முதல், அருணாச்சல பிரதேசத்தின் பங்சாய் கணவாய் வரையில், எங்கள் முகாம் மீது இந்திய ராணுவம் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இன்று அதிகாலை 02 மணி முதல் 04 மணி வரை 150-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இந்த ட்ரோன்கள் அனைத்தும் இஸ்ரேல் மற்றும் பிரான்சில் தயாரிக்கப்பட்டவை என்று கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில், உல்பா அமைப்பின் முக்கிய தளபதியாக விளங்கிய நயான் மெதி என்ற நயன் அசோம் உயிரிழந்துள்ளதாகவும், 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஞாயிற்றுக்கிழமை காலையிலும் இந்த தாக்குதல் தொடர்ந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
ULFA organization reports that the Indian Army launched drones to attack ULFA terrorist camps