கொடிக்கம்பம் விழுந்த சம்பவம் - தவெக நிர்வாகி விளக்கம்.!!
tvk excuetive explain flagpole issue
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நாளை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் கடைசி கட்ட பணியாக மாநாட்டு திடலின் நுழைவு பகுதியில் 100 அடி உயரத்தில் கொடிக்கம்பம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கொடிக்கம்பத்தை கிரேன் மூலம் நடும் பணி நடைபெற்றது. அப்போது கிரேனில் கட்டப்பட்டு இருந்த பெல்ட் அறுந்ததால் கொடிகம்பம் அப்பகுதியில் நின்ற கார் மீது விழுந்ததில் கார் நொறுங்கியது. இருப்பினும், நல்வாய்ப்பாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த நிலையில் கொடிக்கம்பம் விழுந்தது தொடர்பாக தவெக நிர்வாகி சி.டி. நிர்மல் குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் தெரிவித்ததாவது:-

“பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. இங்கு வரும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அனைத்து பணிகளும் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பை கருதியே இவ்வளவு பெரிய அரங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொடிக்கம்பம் விழுந்த நிகழ்வை எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு அடுத்த முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வோம்.
இந்த விஷயத்தை பெரிதுபடுத்த தேவையில்லை. மாற்று ஏற்பாடு தலைமையுடன் பேசி முடிவெடுக்கப்படும். ஏற்பாடு பணிகளில் எந்தத் தொய்வும் இல்லை. கார் ஒன்று சேதமடைந்துள்ளது. காரின் உரிமையாளரிடம் பேசியுள்ளேன். தேவையான இழப்பீடு அவருக்கு அளிக்கப்படும்.
அவரும் தவெக நிர்வாகிதான். அவருக்கு உத்தரவாதம் அளித்துள்ளோம். ‘கொடி மீண்டும் ஏற்றப்படுவதற்கான மாற்று ஏற்பாடுகள் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம். தலைவருடன் பேசிய பிறகு இது குறித்து அறிவிக்கப்படும்” என்றுத் தெரிவித்தார்.
English Summary
tvk excuetive explain flagpole issue