ரில்ஸ்க்காக ரெயில் நிறுத்தம்...! - ஓகா எக்ஸ்பிரஸை அதிர வைத்த 12ம் வகுப்பு மாணவர்கள்...!
Train halted reel video 12th grade students shocked Okha Express
கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் – புனே இடையே இயக்கப்படும் ஓகா எக்ஸ்பிரஸ் ரெயில், நேற்று அதிகாலை கண்ணூர் மாவட்டத்தில் தலைச்சேரி – மாகி இடையிலான தண்டவாளப் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அச்சமயம், தண்டவாள ஓரத்தில் நின்றிருந்த இரு நபர்கள் ரெயிலை நோக்கி சிவப்பு விளக்கை அசைத்துக் காட்டியதை என்ஜின் டிரைவர் கவனித்தார்.
இந்த காட்சியால் கடும் அதிர்ச்சியடைந்த டிரைவர், தண்டவாளத்தில் ஏதோ பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகித்து, உடனடியாக அவசர பிரேக் போட்டு ரெயிலை நிறுத்தினார்.

நடுவழியில் திடீரென ரெயில் நின்றதால் பயணிகள் மத்தியில் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது.ரெயில் நிறுத்தப்பட்ட பிறகு, என்ஜின் டிரைவர் கீழிறங்கி விசாரித்தபோது, சிவப்பு விளக்கு காட்டியவர்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் இரு சிறுவர்கள் என்பது தெரிய வந்தது.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், செல்போனில் ரில்ஸ் வீடியோ எடுக்க வேண்டும் என்பதற்காகவே ரெயிலை நிறுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து என்ஜின் டிரைவர் அளித்த புகாரின் பேரில், கண்ணூர் ரெயில்வே பாதுகாப்புப் படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இரு சிறுவர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், அவர்கள் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டது.ரெயில்வே பாதுகாப்பு விதிகளை மீறி, பலரின் உயிரை அபாயத்தில் தள்ளக்கூடிய இச்செயல் மிகக் கடுமையானது என எச்சரித்த போலீசார், இனிமேல் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடக்கூடாது என்று கடும் அறிவுரை வழங்கி, அவர்களை விடுவித்தனர்.
இதனிடையே, நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் மத்தியில் பதற்றம் நிலவியதுடன், ரெயில் போக்குவரத்திலும் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது.
English Summary
Train halted reel video 12th grade students shocked Okha Express