காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவர் திரு.உமேஷ் சந்திர பானர்ஜி அவர்கள் நினைவு தினம்!.
Today is the memorial day of Mr Umesh Chandra Banerjee the first president of the Congress party
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவர் திரு.உமேஷ் சந்திர பானர்ஜி அவர்கள் நினைவு தினம்!.
உமேஷ் சந்திர பானர்ஜி (Womesh Chunder Bonnerjee) (டிசம்பர் 29, 1844 – ஜூலை 21, 1906) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவர் ஆவார். இவர் வங்காளத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆவார். ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை உறுப்பினர் பதவிக்கு, பிரிட்டிஷ் இந்தியா சார்பாக போட்டியிட்ட முதல் இந்தியர் ஆவார்.
1844ல் கல்கத்தாவில் பிறந்த உமேஷ் சந்திர பானர்ஜி, பள்ளிப் படிப்பை முடித்தவுடன், 1862ல் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார். பின்னர் 1864ல் இங்கிலாந்து சென்று, 1867ல் வழக்கறிஞர் பட்டம் பெற்றார்.
பம்பாய் நகரத்தில், 1885ல் டிசம்பர் 31 ஆம் தேதி அன்று உமேஷ் சந்திர பானர்ஜி தலைமையில், தாதாபாய் நௌரோஜி மற்றும் ஆங்கிலேயரான ஆலன் ஆக்டவியன் ஹியூம் மற்றும் 72 உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில், பிரித்தானிய இந்திய அரசில் இந்திய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த, இந்திய தேசிய காங்கிரஸ் என்ற அரசியல் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முதல் அகில இந்தியத் தலைவராக உமேஷ் பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அலகாபாத்தில் 1892ல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் மீண்டும் உமேஷ் சந்திர பானர்ஜி கட்சியின் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்கூட்டத்தில் இந்தியர்கள் தங்களது அரசியல் சுதந்திரத்திற்கானத் தகுதியை நிரூபிக்க வேண்டிய நிலைப்பாட்டை எடுத்துரைத்தார்.

தமிழின் முதல் புதினத்தைப் படைத்தவரும், மறுமலர்ச்சி கவிஞரும், சமூக சீர்திருத்தவாதியுமான திரு.மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் நினைவு தினம்!.
புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் சாமுவேல் வேதநாயகம் பிள்ளை 1826ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலுள்ள குளத்தூரில் பிறந்தார்.
மாயூரம் மாவட்ட முன்சீஃபாக 13 ஆண்டுகள் பணிபுரிந்ததால், மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கப்பட்டார். வாழ்க்கை நெறிகள், பொது நீதிகள், பெண் கல்வி, ஒற்றுமை உணர்வு, புதிய சிந்தனைகள், முற்போக்கு கருத்துகள் ஆகியவை இவரது கவிதைகளின் கருப்பொருளாக அமைந்தன.
தமிழகத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது, தன் சொத்துகள் அனைத்தையும் தானமாக வழங்கினார். குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறும் வழக்கத்தை கடுமையாக எதிர்த்தார்.
தமிழின் முதல் புதினத்தைப் படைத்தவரும், மறுமலர்ச்சி கவிஞரும், சமூக சீர்திருத்தவாதியுமான சாமுவேல் வேதநாயகம் பிள்ளை 62வது வயதில் 1889 ஜூலை 21 ஆம் தேதி அன்று மறைந்தார்.
English Summary
Today is the memorial day of Mr Umesh Chandra Banerjee the first president of the Congress party