உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் 'பிரசாந்த்' இல் பாகிஸ்தான் எல்லை அருகே பறந்த குடியரசு தலைவர்..!
The President flew near the Pakistan border in the locally made military helicopter Prashant
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் எல்சிஎச் ‘பிரசாந்த்’. இதில் இந்திய - பாகிஸ்தான் எல்லை அருகே குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பயணித்துள்ளார். அப்போது 'தற்சார்பு பாரதத்தின் சக்திவாய்ந்த சின்னம் பிரசாந்த்’ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள விமானப் படைத் தளத்தில் இருந்து, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இலகு ரக போர் ஹெலிகாப்டர் பிரச்சாந்தில் குரூப் கேப்டன் நயான் சாந்திலால் பஹுவாவுடன் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பயணம் மேற்கொண்டார்.
அவருடன் இந்திய விமானப் படைத் தளபதி ஏ.பி.சிங் மற்றும் கமாண்டர் கேப்டன் ஏ.மகேந்திரா ஆகியோர் மற்றொரு ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டனர். சுமார் 25 நிமிடப் பயணத்தின் போது காடிசர் ஏரி மற்றும் ஜெய்சால்மர் கோட்டை மீது ஹெலிகாப்டரில் பறந்து சென்று பீரங்கி இருந்த இலக்கை நோக்கி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தப் பயணம் குறித்து பார்வையாளர் புத்தகத்தில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு குறிப்பு எழுயுள்ளார். அதில், ''உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இலகு ரக போர் ஹெலிகாப்டர் “பிரசாந்த்“-ல் பறந்து சென்றது சிறந்த அனுபவத்தை அளித்தது. இந்தப் பயணம் நாட்டின் பாதுகாப்புத் திறன் மீது ஒரு புதிய பெருமையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பயணத்தை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த இந்திய விமானப் படை மற்றும் ஜெய்சால்மர் விமானப் படைத் தளத்தின் குழுவுக்கு வாழ்த்துகள்’’ என குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பயணம் தொடர்பாக குடியரசுத் தலைவரின் சமூக ஊடக பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
''பிரசாந்த் ஹெலிகாப்டர் தன்னம்பிக்கையின் சின்னம். நான் தற்போது புகழ்பெற்ற ஜெய்சல்மார் கோட்டையின் மீது பறந்து கொண்டிருக்கிறேன். நமது நாட்டின் துணிச்சலான விமான வீரர்களால் நான் மிகவும் பெருமை கொள்கிறேன். எல்சிஎச் பிரசாந்த் தற்சார்பு பாரதத்தின் சக்திவாய்ந்த சின்னம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
The President flew near the Pakistan border in the locally made military helicopter Prashant