'ஈரானில் உள்ள இந்தியர்கள் போராட்டங்கள் நடைபெறும் இடத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும்'; மத்திய அரசு அறிவுறுத்தல்..!
The central government has advised Indians in Iran to avoid going to places where protests are taking place
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மேற்காசிய நாடான ஈரானில் விலைவாசி சடுதியாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் அங்குள்ள முக்கிய நகரங்களில் வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த போராட்டம் தீவிரமடைந்த நிலையில், வன்முறையாக மாறிய நிலையில், இதுவரை 15க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில் 'அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினால், அமெரிக்கா வேடிக்கை பார்க்காது' என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், இஸ்ரேல், அமெரிக்க நாடுகள் தான் தங்கள் நாட்டில் போராட்டங்களை தூண்டி விடுவதாக ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். போராட்டங்கள் நடைபெறும் இடத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''சமீபத்திய நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, இந்தியர்கள் மறு அறிவிப்பு வரும் வரை ஈரான் நாட்டிற்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது ஈரானில் உள்ள இந்திய குடிமக்கள் மற்றும் இந்திய தகவல் தொடர்பு அதிகாரிகள் உரிய எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்கு செல்வதைதவிர்க்க வேண்டும். மேலும் டெஹ்ரானில் தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகத்தின் இணைய தளத்தை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். ஈரானில் வசிக்கும் இந்தியர்கள், ஏற்கனவே பதிவு செய்யாமல் இருந்தால், இந்தியத் தூதரகத்தில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.'' என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
The central government has advised Indians in Iran to avoid going to places where protests are taking place