நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது; மத்திய அரசு அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் முழுத் திறனுடன் இயங்கி வருவதால் மீண்டும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

அதேநேரம், ஒரே நாளில் 53 லட்சத்திற்கும் அதிகமான கேஸ் சிலிண்டர்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாகவும், இனி தட்டுப்பாடு ஏற்படாது எனவும் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் பதற்றங்களுக்கு மத்தியிலும், இந்தியாவில் எரிபொருள் விநியோகம் எவ்விதத் தடையுமின்றி சீராக நடைபெறுவதை உறுதி செய்ய மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் காரணமாக பொதுமக்கள் யாரும் அச்சமடைந்து பெட்ரோல், டீசல் அல்லது சமையல் எரிவாயுவை (LPG) அளவுக்கு அதிகமாக வாங்கிச் சேமிக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், சனிக்கிழமையான நேற்று ஒரே நாளில் மட்டும் நாடு முழுவதும் சுமார் 53.5 லட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், வீடுகளுக்கான குழாய் வழி எரிவாயு (PNG) மற்றும் வாகனங்களுக்கான சிஎன்ஜி (CNG) விநியோகம் 100 சதவீதம் தடையின்றி வழங்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

நாட்டின் எரிபொருள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையில் சிலிண்டர் விற்பனை செய்பவர்களைக் கண்டறிய நாடு முழுவதும் ஒரே நாளில் 2400-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள போதிலும், இந்திய நுகர்வோரைப் பாதுகாக்கும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10 ரூபாய் மத்திய அரசு குறைத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.

அதேபோல், மக்கள் பயன்பாட்டு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளதோடு, சுமார் 39,000 பிஎன்ஜி வாடிக்கையாளர்கள் தங்கள் எல்பிஜி இணைப்புகளைத் திரும்ப ஒப்படைத்துள்ளதாகவும், ஆட்டோ எல்பிஜி விற்பனை பிப்ரவரி மாதத்தை விட ஏப்ரல் மாதத்தில் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், கடல்வழிப் போக்குவரத்து பாதுகாப்பைப் பொறுத்தவரை, 31 இந்திய மாலுமிகளுடன் வந்த 'தேஷ் கரிமா' (Desh Garima) என்ற இந்திய கச்சா எண்ணெய் கப்பல், பதற்றம் நிறைந்த ஹார்முஸ் ஜலசந்தியைப் (Strait of Hormuz) பாதுகாப்பாகக் கடந்துள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்தக் கப்பல் ஏப்ரல் 22-ஆம் தேதி மும்பை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேப்போன்று, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்திய மாலுமிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், நிலைமையை அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Central Government announces that there will be no fuel shortage in the country


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->