15 ஆயிரம் கொடுத்தாத்தான் பத்திரமா...? - லஞ்ச வேட்டையில் கையும் களவுமாகச் சிக்கிய சார் பதிவாளர்...
Is it safe to pay 15 thousand Registrar caught red handed bribe hunt
பதிவு செய்யப்பட்ட வீட்டுமனை பத்திர ஆவணங்களை வழங்குவதற்காக லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில், பொன்னேரி சார் பதிவாளர் உள்ளிட்ட 3 பேரை திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவலர்கள் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பொதுமக்கள் கூட்டம் நிறைந்த சார் பதிவாளர் அலுவலகத்திலேயே லஞ்சப் பணம் கைமாறியபோது 3 பேரும் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன்.

இவர் பொன்னேரி தாலுகா சிறுளப்பாக்கம் கிராமத்தில் 2 வீட்டுமனைகளை வாங்கியிருந்தார். இதற்கான பத்திரங்களை பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த பின்னர், பதிவு செய்யப்பட்ட ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள சார் பதிவாளர் சங்கரை அணுகியுள்ளார்.
அப்போது, பதிவு செய்யப்பட்ட பத்திர ஆவணங்களை வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் என சார் பதிவாளர் சங்கர் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத நடராஜன், இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவலர்களிடம் புகார் அளித்தார்.
புகாரைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவலர்கள் நடவடிக்கையில் இறங்கினர். அவர்களின் திட்டப்படி, ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரம் பணம் நடராஜனிடம் வழங்கப்பட்டது. அந்தப் பணத்தை லஞ்சமாகக் கேட்பவர்களிடம் கொடுக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.இதற்கிடையில், லஞ்ச ஒழிப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்றனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு பத்திரப்பதிவு பணிகளுக்காக ஏராளமான பொதுமக்கள் அலுவலகத்தில் கூடியிருந்தனர். இந்த கூட்டத்தில் காவலர்கள் சாதாரண பொதுமக்களைப் போல கலந்து கொண்டு, யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
காவலர்களின் திட்டப்படி நடராஜன், ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரத்தை லஞ்சமாக வழங்கியுள்ளார். அந்தப் பணத்தை சார் பதிவாளர் சங்கர், பத்திரப்பதிவு எழுத்தர் ரமேஷ் மற்றும் அவரது உதவியாளர் நித்யா ஆகியோர் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.அப்போது தயாராக இருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவலர்கள் அதிரடியாகச் செயல்பட்டு, 3 பேரையும் கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் இருந்த லஞ்சப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து, சார் பதிவாளர் சங்கர் உள்ளிட்ட 3 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.பத்திர ஆவணத்தை வழங்குவதற்காக லஞ்சம் கேட்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், சார் பதிவாளர் உள்ளிட்ட 3 பேர் அலுவலகத்திலேயே சிக்கிய சம்பவம் பொன்னேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Is it safe to pay 15 thousand Registrar caught red handed bribe hunt