10-ஆம் வகுப்பு முடித்தவர்கள் கூட மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம்; மத்திய தேர்வு ஆணையம் அறிவிப்பு..!
SSC releases 3003 vacancies
10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றவர்களுக்கு இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகள்/அமைப்புகளில் 382 பிரிவுகளில் காலியாக உள்ள 3003 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பை (XIV/2026/Selection Posts ) மத்திய தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. கணினி அடிப்படையிலான தேர்வு முறையின் மூலம் இத்தேர்வுக்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
முக்கியமான நாட்கள்: தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 13.04.2026 முதல் 05.05.2026 முதல், (நள்ளிரவு மணி 11.00 வரை) விண்ணப்பிக்கலாம். 11.05.2026 முதல் 13.05.2026 ( நள்ளிரவு 11.00 மணி வரை) ஆன்லைனில் விண்ணப்பிக் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாளாகும். இந்த தேதிகளில் விண்ணப்பங்களில், திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
ஒவ்வொரு பதவிக்குமான கல்வித்தகுதி, வயதுவரம்பு, நிபந்தனைகள் மற்றும் விண்ணப்ப முறை தொடர்பான விரிவான விளம்பரம், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ssc.nic.in மற்றும் அதன் தென்மண்டல அலுவலகத்தின் sscsr.gov.in வலைதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றவர்களுக்குத் தனித்தனியாகக் காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும். அனைத்து பெண் விண்ணப்பதாரர்களுக்கும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று அரசு உத்தரவுகளின்படி இடஒதுக்கீட்டுச் சலுகையைப் பெறத் தகுதி உடைய எஸ் சி / எஸ் டி / முன்னாள் படைவீரர் / மாற்றுத்திறனாளிகள் (ஓஎச்/எச் எச்/விஎச்/மற்றவர்கள்) உள்ளிட்ட பிரிவினருக்கும் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பதவிகளுக்கான தேர்வு உத்தேசமாக ஜூன் மாதத்தில் நடைபெறக் கூடும். இத்தேர்வுக்கான மின்னணு அனுமதிச் சீட்டினை, தேர்வு நடைபெறும் தேதிக்கு 4 நாட்கள் முன்பிருந்து, தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது பற்றிய தகவல், விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பப்பட்டுள்ளது.
தேர்வு மையங்கள்: இத்தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் வேலூர், ஆந்திரப்பிரதேசத்தில் சிராலா, குண்டூர், காக்கிநாடா, கர்னூல், நெல்லூர், ராஜமுந்திரி, திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம் மற்றும் விஜயநகரம், தெலங்கானாவில் ஹைதராபாத், கரீம்நகர் மற்றும் வாரங்கல் ஆகிய 20 நகரங்களில் நடைபெற உள்ளது.
மேல் விவரங்கள் / சந்தேகங்களுக்கு தேர்வாணையத்தின் தென்மண்டல அலுவலகத்தின் உதவி எண் (லேண்ட்லைன் – 044 285 1139 & மொபைல் - 94451 95946) உதவி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். Regional Director (SR), Staff Selection Commission, 2nd Floor, EVK Sampath Building, DPI Campus, College Road, Chennai, Tamil Nadu-600006 (www.sscsr.gov.in) என்ற முகவரியை அணுகலாம்.
English Summary
SSC releases 3003 vacancies