மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்? புதிய நிதியமைச்சராக சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட வாய்ப்பு!
Speculation Mounts Over Shaktikanta Das as Potential New Finance Minister
மத்திய நிதியமைச்சராகப் பொறுப்பு வகித்து வரும் நிர்மலா சீதாராமனுக்குப் பதிலாக, இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ் புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் பலத்த ஊகங்கள் எழுந்துள்ளன. 2019-ஆம் ஆண்டு முதல் நிதியமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன், 2024 பொதுத்தேர்தல் வெற்றிக்குப் பிறகும் அதே துறையில் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், மோடி அமைச்சரவையின் முக்கிய இலாகாக்களில் அதிரடி மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை (ஜூன் 29, 2026) வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
வரலாற்றுச் சாதனைப் பின்னணி
தற்போது 69 வயதான சக்திகாந்த தாஸ், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைச் செயலராக (Principal Secretary) உள்ளார். அவர் ஒருவேளை புதிய நிதியமைச்சராகப் பதவியேற்றால், சி.டி.தேஷ்முக் மற்றும் டாக்டர் மன்மோகன் சிங்கிற்குப் பிறகு ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து நிதியமைச்சராகும் மூன்றாவது நபர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெறுவார்.
சி.டி.தேஷ்முக்: 1943 முதல் 1949 வரை ரிசர்வ் வங்கியின் முதல் இந்திய ஆளுநராகவும், பின்னர் 1950 முதல் 1956 வரை மத்திய நிதியமைச்சராகவும் இருந்தார்.
மன்மோகன் சிங்: 1982 முதல் 1985 வரை ரிசர்வ் வங்கி ஆளுநராகவும், 1991 முதல் 1996 வரை நிதியமைச்சராகவும், அதன் பின்னர் 2004 முதல் 2014 வரை நாட்டின் பிரதமராகவும் செயலாற்றினார்.
சக்திகாந்த தாஸ்: 2018 முதல் 2024 வரை ரிசர்வ் வங்கியின் 25-ஆவது ஆளுநராக நாட்டின் பொருளாதாரத்தை வழிநடத்தினார்.
சக்திகாந்த தாஸின் நிர்வாகத் தகுதி
1957-இல் ஒடிசாவின் புவனேஷ்வரில் பிறந்த சக்திகாந்த தாஸ், டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாற்றில் முதுகலைப் பட்டமும், பிரிட்டனின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். 1980-ஆம் ஆண்டின் தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் (IAS) அதிகாரியான இவர், கடந்த 37 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் நிதி, வரி விதிப்பு மற்றும் பொருளாதாரத் துறைகளில் மிக முக்கியப் பங்காற்றியுள்ளார்.
இருப்பினும், பாரதிய ஜனதா கட்சியில் (BJP) அதிகாரப்பூர்வ உறுப்பினராக இல்லாத ஒருவரை இவ்வளவு முக்கியமான ஒரு பொறுப்பில் அமர்த்துவதற்கு கட்சிக் குள்ளும் அதன் கூட்டணிக் வட்டாரங்களிலும் முழுமையான ஆதரவு கிடைக்குமா என்ற கேள்வியும் தற்பொழுது எழுந்துள்ளது. இந்த அமைச்சரவை மாற்றப் பட்டியலில் சக்திகாந்த தாஸுடன் சேர்த்து மேலும் பல மூத்த அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்படலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Speculation Mounts Over Shaktikanta Das as Potential New Finance Minister