சோனம் வாங்சுக்கிற்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை... நாடு முழுவதும் குவியும் பிரார்த்தனைகள்! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் தொடர் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த லடாக்கைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், 21 நாட்கள் நீடித்த உண்ணாவிரதத்திற்குப் பிறகு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மூவர் கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர்.

அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கும் உண்ணாவிரதத்தில் இணைந்து, நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகளில் நடைபெறுவதாக கூறப்படும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், தேர்வு அழுத்தத்தால் மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டத்தை தீவிரப்படுத்தினார்.நாட்கள் நீண்ட உண்ணாவிரதம் காரணமாக சோனம் வாங்சுக்கின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்த டெல்லி உயர்நீதிமன்றம், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது.உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போதிலும், தனது கோரிக்கைகளில் உறுதியாக இருந்த சோனம் வாங்சுக், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்று மனு அளிக்கும் திட்டத்தையும் அறிவித்திருந்தார்.

இதற்கிடையில் மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், அவரது உடல் எடை 9.5 கிலோ வரை குறைந்திருப்பதுடன், நீண்டகால உண்ணாவிரதத்தின் தாக்கம் உடல்நலத்தில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், தனது 21-வது நாள் உண்ணாவிரதத்தையும் அவர் தொடர்ந்தார்.

ஆனால் நேற்று காலை, சாதாரண உடையில் ஜந்தர் மந்தர் போராட்ட தளத்துக்குச் சென்ற காவலர்கள், சோனம் வாங்சுக்கை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முயன்றனர்.அப்போது அங்கிருந்த போராட்டக்காரர்கள், சோனம் வாங்சுக்கை அழைத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போராட்டப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

பின்னர் சோனம் வாங்சுக்கை ஸ்டிரெச்சரில் ஏற்றி காவலர்கள் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.சப்தர்ஜங் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், நீண்டகால உண்ணாவிரதம் மற்றும் உடலில் ஏற்பட்ட நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சோனம் வாங்சுக் மிகவும் பலவீனமடைந்துள்ளதாகவும், தற்போது அவரது முக்கிய உடல்நலக் குறியீடுகள் சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், முழுமையான உடல்நல மீட்புக்காக தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பும் சிகிச்சையும் அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.மேலும், நரம்பு வழியாக செலுத்தப்படும் திரவச்சத்து, வாய் வழி நீரிழப்பு தடுப்பு கரைசல் (ஓஆர்எஸ்) மற்றும் பிற மருந்துகளை ஏற்க சோனம் வாங்சுக் மறுப்பு தெரிவித்து வருவதாகவும், அவரது உடல்நலனை கருத்தில் கொண்டு சிகிச்சையை ஏற்றுக்கொள்ளுமாறு மருத்துவக் குழுவினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நடைபெற்ற இந்த தொடர் போராட்டத்தில் சோனம் வாங்சுக் இணைந்து உண்ணாவிரதம் மேற்கொண்டது நாடு முழுவதும் பரவலான கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அவரது உடல்நிலை மற்றும் போராட்டத்தின் அடுத்தகட்டம் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sonam Wangchuk undergoing treatment hospital Prayers pouring from all over country


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->