மாம்பழ சீசனில் இந்தியாவிற்கு நேர்ந்த அதிர்ச்சி...! ஜப்பான் விதித்த திடீர் தடை...காரணம் தரக்கட்டுப்பாடா...? - புதிய விவாதம்
shock India during mango season Japan sudden ban is it due quality control New debate
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்களுக்கு ஜப்பான் திடீர் தடைவிதித்திருப்பது விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பான் எடுத்துள்ள இந்த கடுமையான நடவடிக்கை, இந்திய மாம்பழ ஏற்றுமதி துறைக்கு பின்னடைவை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக இந்திய மாம்பழங்களுக்கு ஜப்பான் கட்டுப்பாடு விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பான் நாட்டின் கடுமையான சுகாதார மற்றும் உணவு பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாததே இந்த தடைக்கு முக்கிய காரணமாக தெரிவிக்கப்படுகிறது.
ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பழங்கள் அனைத்தும் ‘வேப்பர் ஹீட் ட்ரீட்மென்ட்’ எனப்படும் ஆவி வெப்ப சுத்திகரிப்பு முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது அந்நாட்டின் முக்கிய நிபந்தனையாகும். இந்த சுத்திகரிப்பு பணிகள், ஜப்பான் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நடைமுறையும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த ஆண்டில் இந்தியாவில் செயல்பட்டு வந்த சில சுத்திகரிப்பு நிலையங்களில் தேவையான தொழில்நுட்ப கட்டமைப்புகள் முறையாக செயல்படவில்லை என்றும், சுகாதார தரநிலைகளில் குறைபாடுகள் இருப்பதையும் ஜப்பான் அதிகாரிகள் ஆய்வின்போது கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் மாம்பழங்களின் இறக்குமதியை ஜப்பான் முழுமையாக நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தடை காரணமாக ஏற்றுமதியை நம்பி இருந்த மாம்பழ விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கடும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
குறிப்பாக வெளிநாட்டு சந்தையை நம்பி விளைச்சலை தயாரித்து வந்த விவசாயிகளுக்கு இந்த முடிவு பெரிய பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளதாக விவசாய சங்கங்கள் தெரிவித்து வருகின்றன.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, ஜப்பான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும், சுத்திகரிப்பு நிலையங்களில் உள்ள தொழில்நுட்ப குறைபாடுகளை விரைவாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
shock India during mango season Japan sudden ban is it due quality control New debate