'டாக்காவில் கைது செய்து என்னை கொல்லக்கூடும்'; நாடும் திரும்பும் நிலையில் உள்ள ஷேக் ஹசீனா பேட்டி..!
Sheikh Hasina says she may be arrested and killed in Dhaka
கடந்த 2024-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் புரட்சி காரணமாக அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதை அடுத்து டாக்காவில் இருந்து தப்பித்து இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவருடன் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸமான் கான் கமால் உள்ளிட்டவர்களும் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு ஷேக் ஹசீனா அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது;
வரும் டிசம்பர் மாதத்தில் தானும், அவாமி லீக்கின் மற்ற தலைவர்களும் சுய முடிவின் அடிப்படையில் வங்கதேசம் திரும்ப திட்டமிட்டுள்ளதாகவும், தான் நாடு திரும்பும்போது அவர்கள் தன்னை கைது செய்யலாம் அல்லது கொல்லக்கூடக் கூடும் என்று அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

ஆனால், தான் எப்படியும் சென்றே ஆக வேண்டும் எனவும், எனது கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் கடும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வருகின்றதாகவும், மரணம் நேரிட்டால் அது தனது சொந்த மண்ணில், அவரின் பெற்றோர்கள் அடக்கம் செய்யப்பட்ட அதே மண்ணில், அவர்கள் ரத்தம் சிந்திய மண்ணில் நிகழ வேண்டும் என்று விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், டாக்காவில் உள்ள அதிகாரிகள் தன்னை மீண்டும் அழைத்துச் செல்ல விரும்புகிறார்கள் எனவும், தன்னை திருப்பி அனுப்புமாறு அவர்கள் இந்தியாவுக்கு தொடர்ந்து கடிதங்களை அனுப்பி வருகின்றதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சூழலில், ''நானே நேரில் செல்வேன். நான் நாடு திரும்புவதன் மூலம் நாட்டின் மிக முக்கிய அரசியல் எதிரியை அந்த அரசு எவ்வாறு நடத்துகிறது என்பதை அறிய விரும்புகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தான் நீதியின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், சட்ட நடவடிக்கைகள் தொடங்கும்போது நீதிமன்ற நடவடிக்கைகள் எவ்வளவு கேலிக்கூத்தானவை என்பது மக்களுக்குத் தெளிவாகத் தெரியும் என்று தான் உணர்கிறதாகவும்,அதை நிரூபிக்க விரும்புவதக்கவும் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பெட்டியில் அவர் பேசுகையில், எங்கள் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கிட்டத்தட்ட அனைவர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பலர் தலைமறைவாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து வங்கதேசத்துக்கு திரும்புவதற்கான திட்டம் குறித்து டாக்காவில் உள்ள அதிகாரிகளுடன் தான் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று கூறியதோடு, ஜனநாயகம், வாக்குரிமை, அவாமி லீக்கின் அரசியல் உரிமைகள், நீதி ஆகியவை ரகசிய பேச்சுவார்த்தைக்குரிய விஷயங்கள் அல்ல என்று சுட்டிக்காட்டியுள்ளார். அதேப்போன்று சிறைவாசம் குறித்தும் தான் அச்சப்படவில்லை என்றும், இதற்கு முன்பும் பலமுறை நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாக கூறியுள்ளார்.

தனது ஆட்சிக்காலத்தில் தவறுகள் நடந்திருக்கலாம். ஒரு அரசாங்கம் நீண்ட காலம் செயல்படும்போது தவறுகள் நடக்கலாம். அதேப்போன்று எந்தவொரு அரசாங்கமும் தவறுகளுக்கு அப்பாற்பட்டது அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், ஒரு அரசாங்கத்தின் நன்மை தீமைகளையும், சரி தவறுகளையும் தீர்மானிக்கும் உரிமை மக்களுக்கே உரியது என்றும், அந்த தீர்ப்பை தான் மக்களிடமே விட்டுவிடுவதாக கூறியுள்ளார்.
மேலும், அவாமி லீக் கட்சியை மறுசீரமைக்கும் பணிகளின் ஒரு பகுதியாக மொத்தமுள்ள 300 நாடாளுமன்றத் தொகுதிகளில் 125 தொகுதிகளில் இணைய வழி கூட்டங்களை நடத்தியுள்ளதாகவும் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். அத்துடன், வங்கதேச அரசு தன மீது குற்றத் தீர்ப்பை வழங்கி இருக்கலாம்.
அதனால், இனி தேர்தல்களில் போட்டியிட முடியாமலும் போகலாம். ஆனால், அவாமி லீக் கட்சிக்கு அவர்கள் ஏன் தடை விதிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியதோடு, நாங்கள் மோசமாக செயல்பட்டிருந்தால் அது குறித்த மக்களே முடிவெடுக்கட்டும் என்று ஹசினா அறிவித்துள்ளார்.
English Summary
Sheikh Hasina says she may be arrested and killed in Dhaka