டெல்லியில் சாலை விபத்து: சொகுசு கார் மோதி மத்திய நிதித்துறை மூத்த அதிகாரி உயிரிழப்பு..!
Senior central finance ministry official dies in Delhi Road accident after being hit by luxury car
மத்திய நிதித்துறையின் கீழ் செயல்படும் பொருளாதார விவகாரங்கள் பிரிவில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வந்த நவ்ஜத் சிங் (52) சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். தலைநகர் டெல்லியின் ஹரி நகரை சேர்ந்த இவர், அவரது மனைவியுடன் நேற்று மாலை பைக்கில் தலா ஹுன் பகுதியில் உள்ள குருத்வாராவுக்கு மதவழிபாடு நடத்த சென்றுள்ளார். அங்கு வழிபாடு நடத்திவிட்டு பைக்கில் தம்பதி வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது, டெல்லி கண்டோன்மண்ட் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள ரிங் ரோடு பகுதியில் வண்டி சென்றுகொண்டிருந்த போது சாலையில் எதிரே வேகமாக வந்த பிஎம்டபிள்யூ சொகுசு கார் நவ்ஜத் சிங்கின் பைக் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த கோர விபத்தில் பைக்கில் பயணித்த நவ்ஜத் சிங்கும் அவரது மனைவியும் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சொகுசு காரை குருகிராமை சேர்ந்த தொழிலதிபர் பரிக்ஷித் மங்கரின் மனைவி ககன்பிரீத் ஓட்டியுள்ளார். அந்த காருக்குள் பரிக்ஷித் மன்கர் மற்றும் 02 பிள்ளைகளும் இருந்துள்ளனர். இந்த விபத்தில் காரை ஒட்டிய ககன்பிரீத் அவரது கணவர் பரிக்ஷித் மன்கரும் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து, விபத்தில் காயமடைந்த நிதித்துறை அதிகாரி நவ்ஜத் சிங், அவரது மனைவி மற்றும் சொகுசு காரில் வந்த பரிக்ஷித் மங்கர் அவரது மனைவி ககன்பிரீத் ஆகிய 04 பேரையும் அப்பகுதியில் சென்ற குல்பன் என்பவர் தனது வேனில் அசாத்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், ஆவர், விபத்து நடைபெற்ற பகுதியில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் இந்த தனியார் மருத்துவமனை உள்ளது.
அதாவது, தொழிலதிபர் பரிக்ஷித் மங்கர் மற்றும் அவரது மனைவி ககன்பிரீத் வசித்து வரும் டெல்லியின் அசாத்பூர் ரஜோரி கார்டன் பகுதியில் இந்த மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை பரிக்ஷித் மங்கரின் உறவினருக்கு சொந்தமான மருத்துவமனை ஆகும் என கூறப்படுகிறது.
விபத்தில் படுகாயமடைந்த நவ்ஜத் சிங்கை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்குமாறு நவ்ஜத்தின் மனைவி வேன் டிரைவர் குல்பனிடம் கூறியுள்ளார். ஆனால், தொழிலதிபர் தம்பதி மங்கர் மற்றும் ககன்பிரீத் அனைவரையும் தங்கள் உறவினரின் மருத்துவமனையில் அனுமதிக்கும்படி வலியுறுத்தியுள்ளார். இதனால், 22 கிலோமீட்டர் தொலைவு பயணித்து ககன்பிரீத்தின் உறவினர் மருத்துவமனையில் 04 பேரையும் குல்பன் அனுமதித்துள்ளார்.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 15 நிமிடங்களில் நவ்ஜத் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நவ்ஜத் சிங்கின் மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ககன்பிரீத் மற்றும் அவரது கணவரான தொழிலதிபர் பரிக்ஷித் மங்கர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இதனையடுத்து, விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மருத்துவமனைக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, விபத்தை ஏற்படுத்தியது மற்றும் தனது கணவர் படுகாயமடைந்த போதும் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கமால் வேனில் 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தங்கள் உறவினரின் மருத்துவமனையில் அனுமதித்தது, இதனால் ஏற்பட்ட கால தாமதமே தனது கணவரின் உயிரிழப்பிற்கு காரணம் என நவ்ஜத் சிங்கின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளனர்.
மேலும், விபத்தை ஏற்படுத்திய தொழிலதிபர் பரிக்ஷித் மங்கர் மற்றும் அவரது மனைவி ககன்பிரீத் மீதும் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், லேசான காயங்களுக்கு சிகிச்சை பெற்ற ககன்பிரீத்தை மருத்துவமனை டிஸ்சார்ஜ் செய்தபின் கைது செய்துள்ளனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Senior central finance ministry official dies in Delhi Road accident after being hit by luxury car